தென்காசி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
தென்காசி, அக்.11-
ஊரக உள்ளாட்சி தேர்தலில் தென்காசி மாவட்டத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இதையொட்டி வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
வாக்கு எண்ணும் மையங்கள்
தென்காசி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6 மற்றும் 9-ந்தேதிகளில் இரு கட்டமாக நடைபெற்றது. 14 மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், 144 ஒன்றிய குழு உறுப்பினர்கள், 221 பஞ்சாயத்து தலைவர்கள், 1,905 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு நடைபெற்ற இந்த தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது.
வாக்குப்பதிவுக்கு பின்னர் ஓட்டு பெட்டிகளை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட 10 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைத்துள்ளனர். வாக்கு எண்ணும் மையங்களில் மொத்தம் 928 கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து வாக்குப்பெட்டிகள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.
பலத்த பாதுகாப்பு
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின்பேரில், 2 கூடுதல் சூப்பிரண்டுகள், 8 துணை சூப்பிரண்டுகள் மேற்பார்வையில், வாக்கு எண்ணும் மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு மையத்துக்கும் தலா ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 27 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாளை, வாக்கு எண்ணிக்கை
ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. தென்காசி மாவட்டத்தில் தேர்தல் பார்வையாளர் சங்கர், மாவட்ட கலெக்டரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கோபால சுந்தரராஜ் மேற்பார்வையில் வாக்கு எண்ணும் பணி நடைபெறுகிறது.
இதையொட்டி வாக்கு எண்ணும் மையங்களில் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. இரவிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வகையில், மின்விளக்குகள் அமைத்து தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
Related Tags :
Next Story