நெல்லை-தென்காசியில் ஊரக உள்ளாட்சி தேர்தல்: 19 மையங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை


நெல்லை-தென்காசியில் ஊரக உள்ளாட்சி தேர்தல்: 19 மையங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை
x
தினத்தந்தி 11 Oct 2021 2:34 AM IST (Updated: 11 Oct 2021 2:34 AM IST)
t-max-icont-min-icon

19 மையங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை

நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் 19 மையங்களில் நாளை எண்ணப்படுகிறது. முடிவுகளை உடனடியாக அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
உள்ளாட்சி தேர்தல்
நெல்லை, தென்காசி உள்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. 
இதில் நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை, மானூர், பாப்பாக்குடி, சேரன்மாதேவி, அம்பை, களக்காடு, நாங்குநேரி, ராதாபுரம், வள்ளியூர் ஆகிய 9 ஒன்றியங்களிலும், தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், கடையம், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர், வாசுதேவநல்லூர், தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சங்கரன்கோவில், குருவிகுளம் ஆகிய 10 ஒன்றியங்களிலும் தேர்தல் நடந்துள்ளது.
19 மையங்கள்
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய ஓட்டுப்பெட்டிகள் அனைத்தும் ஒன்றியம் வாரியாக வாக்கு எண்ணும் 19 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.
அதாவது நெல்லை மாவட்டத்தில் அம்பை ஒன்றியத்துக்கு விக்கிரமசிங்கபுரம் அமலி மகளிர் மேல்நிலைப்பள்ளி, சேரன்மாதேவி ஒன்றியத்துக்கு பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி, மானூர் ஒன்றியத்துக்கு காந்திநகர் ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, பாளையங்கோட்டை ஒன்றியத்துக்கு கொங்கந்தான்பாறை ரோஸ்மேரி கல்லூரி, பாப்பாக்குடி ஒன்றியத்துக்கு இடைகால் மெரிட் தொழில்நுட்ப கல்லூரி, நாங்குநேரி ஒன்றியத்துக்கு தெற்கு விஜயநாராயணம் ரெக்ட் தொழில்நுட்ப கல்லூரி, களக்காடு ஒன்றியத்துக்கு திருக்குறுங்குடி டி.வி.எஸ். அரசு மேல்நிலைப்பள்ளி, ராதாபுரம் ஒன்றியத்துக்கு தெற்கு கள்ளிகுளம் தட்சணமாற நாடார் சங்க கல்லூரி, வள்ளியூர் ஒன்றியத்துக்கு அடங்கார்குளம் அழகநேரி எஸ்.ஏ.ராஜா கலைக்கல்லூரி ஆகிய 9 இடங்களில் வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் ஒன்றியத்துக்கு நல்லூர் சி.எஸ்.ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி, கடையம் ஒன்றியத்துக்கு மேட்டூர் செயின்ட் ஜோசப் கல்லூரி, கடையநல்லூர் ஒன்றியத்துக்கு கொடிகுறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்லூரி, கீழப்பாவூர் ஒன்றியத்துக்கு அத்தியூத்து சர்தார் ராஜா என்ஜினீயரிங் கல்லூரி, குருவிகுளம் ஒன்றியத்துக்கு அய்யனேரி உண்ணாமலை கல்லூரி, மேலநீலிதநல்லூர் ஒன்றியத்துக்கு வீரசிகாமணி விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி, சங்கரன்கோவில் ஒன்றியத்துக்கு வீராசாமி செட்டியார் என்ஜினீயரிங் கல்லூரி, செங்கோட்டை ஒன்றியத்துக்கு எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தென்காசி ஒன்றியத்துக்கு குற்றாலம் பராசக்தி பெண்கள் கல்லூரி, வாசுதேவநல்லூர் ஒன்றியத்துக்கு சுப்பிரமணியபுரம் வியாசா பெண்கள் கல்லூரி ஆகிய 10 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்களில் ஓட்டுப்பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.
நாளை வாக்கு எண்ணிக்கை
அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டு உள்ள 19 மையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) வாக்குகள் எண்ணப்படுகிறது. இதற்காக அந்தந்த மாவட்ட கலெக்டர் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் மேற்பார்வையில் அதிகாரிகள் தீவிரமாக ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தனித்தனியாக வாக்குகள் எண்ணும் அறைகள் உருவாக்கப்பட்டு உள்ளது. கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களுக்கு 3 அறைகள், கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு 3 அறைகள், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 2 அறைகள், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்கு ஒரு அறையில் ஓட்டுகள் எண்ணப்படுகிறது. கூடுதலாக பஞ்சாயத்துகள் இருக்கும் ஒன்றியங்களுக்கு கூடுதல் அறைகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
உடனுக்குடன் முடிவு
வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முதலில் ஓட்டு பெட்டிகள் வேட்பாளர்கள் முன்னிலையில் ‘சீல்’ பிரித்து திறக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து பதவி வாரியாக ஓட்டு சீட்டுகள் 4 வண்ண நிறத்தின் அடிப்படையில் பிரித்து எடுக்கப்படுகிறது. பின்னர் அவை வரிசையாக அந்தந்த வாக்கு எண்ணும் அறைகளுக்கு எடுத்து செல்லப்படுகிறது.
வாக்குகள் எண்ணும் அறைகளுக்குள் சின்னம் வாரியாக வாக்கு சீட்டுகளை பிரித்து போடவும், அவற்றை எண்ணி முடிவுகளை சொல்வதற்கும் பெரிய மேஜை அமைக்கப்பட்டு வருகிறது. அதை சுற்றி இரும்பு வேலியும் போடப்படுகிறது. அதன் வெளியே நின்று வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் வாக்கு எண்ணிக்கையை நேரடியாக பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு சுற்று முடிவிலும் வெற்றி பெற்றவர்கள் விவரம் உடனடியாக அறிவிக்கப்படுகிறது. அந்த பணி முடிந்ததும் குறிப்பிட்ட வேட்பாளர்கள், அவர்களது முகவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். பின்னர் அடுத்த பஞ்சாயத்துக்கான வாக்குகள் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க கேமராக்களும் பொருத்தப்பட்டு உள்ளது.
தனித்தனி வழிகள்
வாக்கு எண்ணும் மையத்துக்குள் உரிய அனுமதி பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். ஒன்றிய அலுவலகம் மூலம் அந்தந்த பதவிகளுக்கான வேட்பாளர்கள், முகவர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த சீட்டுடன் வருபவர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்கள் வந்து செல்வதற்கும், போலீசார் மற்றும் அதிகாரிகள் வருவதற்கும் தனித்தனியாக வழிகள் அமைக்கப்பட்டு உள்ளது.
..............

Next Story