அரியலூாில் பலத்த மழை


அரியலூாில் பலத்த மழை
x
தினத்தந்தி 10 Oct 2021 9:05 PM GMT (Updated: 10 Oct 2021 9:05 PM GMT)

அரியலூாில் பலத்த மழை பெய்தது.

அரியலூர்:

பலத்த மழை
அரியலூர் நகரில் கடந்த சில நாட்களாக லேசான தூறலாக மழை பெய்து வந்தது. நேற்று மதியம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலை 4 மணிக்கு மேல் வானில் கருமேகங்கள் சூழ்ந்தன. சிறிது நேரம் லேசாக தூறிய மழை நேரம் செல்லச்செல்ல பலத்த மழையாக மாறி இரவு வரை நீடித்தது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் கடைகள், வீடுகளில் மழைநீர் புகுந்தது. மார்க்கெட் தெருவில் இருந்த தரைக்கடைகள் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டன.
செந்துறை சாலையில் மழைநீர் அதிக அளவில் வந்ததாலும், அரசு மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவர் ஏற்கனவே உடைந்து இருந்ததாலும் மழைநீர் மற்றும் கழிவுநீர் அரசு மேல்நிலைப்பள்ளிக்குள் புகுந்து வாசல் வழியாக வெளியே சென்றது. இதனால் அப்பகுதி வாய்க்கால் போன்று காட்சி அளித்தது. மழைநீர் செல்வதற்கான வாய்க்கால் மிக சிறிய அளவில் கட்டப்பட்டிருந்ததாலும், அரசு மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவரை ஒட்டிச்சென்ற வாய்க்கால் முழுவதுமாக ஆக்கிரமிக்கப்பட்டதாலும், பள்ளிக்குள் புகுந்து மழைநீர் சென்றது குறிப்பிடத்தக்கது.
துர்நாற்றம்
சாதாரண மழைக்கே பள்ளியில் மழைநீர், கழிவுநீர் சென்றுவிடுகிறது. மேலும் நேற்று பெய்த மழையை தொடர்ந்து பள்ளி வளாகம் முழுவதும் துர்நாற்றம் வீச தொடங்கியது. இதனால் இன்று(திங்கட்கிழமை) வகுப்புகளில் மாணவர்கள் அமர்ந்து பாடம் படிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வாரச்சந்தை உள்ள பகுதி மழைநீர் செல்லும் பகுதியானதால் தரைக்கடைகள் அனைத்தும் நீரில் மூழ்கிவிட்டன. செட்டி ஏரிக்கு மழைநீர் ஓரளவு வந்து கொண்டிருக்கிறது.நீர் வரும் வாய்க்காலில் உள்ள கோரைப்புற்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும் என்று 2 மாதங்களுக்கு முன்பே தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. ஆனால் மாவட்ட நிர்வாகம் அதனை சரி செய்யாததால் நேற்று பெய்த பலத்த மழையில் செட்டி ஏரிக்கு குறைந்த அளவே தண்ணீர் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story