5800 கோடி ரூபாய்க்கு சோலார் பவர் நிறுவனத்தை வாங்கியது ரிலையன்ஸ்
ரூபாய் 5800 கோடிக்கு உலகின் முன்னணி சூரிய ஆற்றல் நிறுவனத்தை கையகப்படுத்தியது ரிலையன்ஸ் குழுமம்.
மும்பை,
நார்வேயை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உலகின் மிகப்பெரிய சூரிய சக்தி நிறுவனமான ‘ஆர் ஈ சி சோலர் ஹோல்டிங்ஸ்’ நிறுவனத்தை விலைக்கு வாங்கியுள்ளது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடட் குழுமம் (ஆர் ஐ எல்).
‘ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் லிமிடட் (ஆர் என் இ எஸ் எல்)’ நிறுவனம், சீனா நேஷனல் ப்ளூஸ்டார் குழுமத்திடம் இருந்து சுமார் 5800 கோடி ரூபாய்க்கு அந்த நிறுவனத்தை வாங்கியுள்ளது.
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் முகேஷ் அம்பானி, ஆர் ஈ சி நிறுவனத்தை கையகப்படுத்தியதற்கு தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
ஆர் ஈ சி நிறுவனத்தில் உலகம் முழுவதும் 1300க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த பரிவர்த்தனை முறையாக நிறைவடைந்த பின், அவர்கள் ரிலையன்ஸ் குழும பணியாளர்களாக கருதப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அடுத்த 3 ஆண்டுகளில், ரூபாய் 75 ஆயிரம் கோடி செலவில் குஜராத்தின் ஜாம்நகரில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்தும் 4 ஆலைகளை ஏற்படுத்திட ரிலையன்ஸ் குழுமம் திட்டமிட்டுள்ளது. அதற்காக ஜாம்நகரில் 5000 ஏக்கரில் மெகா கட்டுமானத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த கட்டுமானம் உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்தும் வளாகமாக கட்டப்பட்டு வருகிறது.
1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆர் ஈ சி (புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனம்) நிறுவனம், ஒரு ஆண்டுக்கு சராசரியாக 1800 மெகாவாட் மின் உற்பத்தியை அளிக்கும் திறனுள்ள சோலார் பேனல்களை தயாரித்து வருகிறது. இதுவரை பத்தாயிரம் மெகாவாட் திறனுள்ள சோலார் பேனல்களை உலகம் முழுவதும் அமைத்துள்ளது.
2030ம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்தி 1 லட்சம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய ரிலையன்ஸ் குழுமம் திட்டமிட்டுள்ளது.
Related Tags :
Next Story