மறைமலைநகர் அருகே வாக்கு எண்ணும் மையத்தில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு


மறைமலைநகர் அருகே வாக்கு எண்ணும் மையத்தில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 11 Oct 2021 5:44 PM IST (Updated: 11 Oct 2021 5:44 PM IST)
t-max-icont-min-icon

மறைமலைநகர் அருகே உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள நிலையில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

காட்டாங்கொளத்தூர் ஒன்றியம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 2-ம் கட்டமாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சி மன்ற தலைவர், 2 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 24 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மற்றும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு கடந்த 9-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் அனைத்தும் இரும்பு பெட்டியில் போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான மறைமலைநகர் அருகே மல்ரோஜபுரத்தில் உள்ள தனியார் கல்லூரிக்கு தேர்தல் அதிகாரிகள் கொண்டு சென்று அங்கு பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

வாக்கு எண்ணும் மையத்தில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சி பிரமுகர்களின் ஆதரவாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர் ஆதரவாளர்கள் வாக்கு எண்ணும் மையம் அருகே இரவு காத்த கிளியாக 24 மணி நேரமும் காத்திருந்து தங்களது தரப்பில் வாக்கு மையத்தை கண்காணித்து வருகின்றனர்.

இதையடுத்து, நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மல்ரோஜபுரத்தில் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் செய்து உள்ளனர்.


Next Story