திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெய் கேனுடன் வந்த தாய்-மகன்


திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெய் கேனுடன் வந்த தாய்-மகன்
x
தினத்தந்தி 11 Oct 2021 6:06 PM IST (Updated: 11 Oct 2021 6:06 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெய் கேனுடன் வந்த தாய்-மகனால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்:
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று ஒரு பெண், சிறுவனுடன் வந்தார். அந்த 2 பேரும் தலா ஒரு பை வைத்து இருந்தனர். இதனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது விரக்தியில் காணப்பட்ட அந்த பெண் கண்ணீர்மல்க பேசத் தொடங்கினார். உடனே சுதாரித்து கொண்ட போலீசார், 2 பேரும் வைத்திருந்த பையை பிடுங்கி சோதனையிட்டனர். அதில் பெண் வைத்திருந்த பையில் மண்எண்ணெய் கேன் இருந்தது.
இதையடுத்து போலீசார் மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரிடமும் விசாரித்தனர். அதில் அவர்கள் திண்டுக்கல் அருகேயுள்ள பொன்னகரத்தை சேர்ந்த ஜார்ஜ்பெர்னாண்டஸ் மனைவி சத்தியவனிதா (வயது 30), அவருடைய 12 வயது மகன் என்பது தெரியவந்தது. மேலும் அவர்களுடைய நிலத்தை ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளார். இதுகுறித்து வருவாய்த்துறையினரிடம் முறையாக மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால், கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க மண்எண்ணெய் கேனுடன் வந்ததாக அவர்கள் போலீசாரிடம் கூறினர். இதைத் தொடர்ந்து அவர்களுக்கு போலீசார் அறிவுரை கூறி, மனு கொடுக்க அழைத்து சென்றனர். மண்எண்ணெய் கேனுடன் தாய், மகன் வந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story