குலசேகரன்பட்டினத்தில் 500 ரூபாய்க்காக மனைவியை கொன்ற தொழிலாளி கைது


குலசேகரன்பட்டினத்தில் 500 ரூபாய்க்காக மனைவியை கொன்ற தொழிலாளி கைது
x
தினத்தந்தி 11 Oct 2021 6:15 PM IST (Updated: 11 Oct 2021 6:15 PM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினத்தில் 500 ரூபாய்க்காக மனைவியை கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்

குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினத்தில் 500 ரூபாய்க்காக மனைவியை வெட்டிக்கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
கூலி தொழிலாளி
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் கருங்காலி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுடலை (வயது 77), கூலி தொழிலாளி. இவருடைய மனைவி முத்தம்மாள் (62). இவர்களுக்கு பெருமாள் (35) என்ற மகனும், 3 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.
பெருமாள் வீட்டின் அருகில் பெற்றோர் சுடலை-முத்தம்மாள் தனியாக மற்றொரு வீட்டில் வசித்து வந்தனர். குலசேகரன்பட்டினம் கோவில் தசரா திருவிழாவையொட்டி, பெருமாளின் வீட்டுக்கு சகோதரிகள், உறவினர்கள் வந்தனர்.
500 ரூபாய்க்காக...
நேற்று காலையில் பெருமாளின் வீட்டில் உறவினர்கள், கோவிலில் மாலை அணிவது தொடர்பாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சுடலை, ‘எனது 500 ரூபாயை யார் எடுத்தார்கள்?’ என்று கூறி வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டார்.
அப்போது அங்கு கட்டிலில் படுத்து இருந்த மனைவி முத்தம்மாளிடம், ‘நீ தான் எனது பணத்தை எடுத்துள்ளாய், அதனை திருப்பிக் கொடு’ என்று கூறி அவதூறாக பேசினார்.
வெட்டிக்கொலை
மேலும் ஆத்திரம் அடைந்த சுடலை அரிவாளால் மனைவி முத்தம்மாளை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் தலை, கழுத்து, மார்பு உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த முத்தம்மாள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைப் பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து அலறினர். இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கைது
உடனே, போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சுடலையை கைது செய்தனர்.
குலசேகரன்பட்டினத்தில் 500 ரூபாய்க்காக மனைவியை கணவரே வெட்டிக்கொலை செய்த பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story