கொசஸ்தலை ஆற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ளம்; கரையோர மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
தண்டோரா மூலம் எச்சரிக்கை
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே ஆந்திர மாநிலம் சித்தூரில் கிருஷ்ணாபுரம் என்ற இடத்தில் அம்மபள்ளி அணை உள்ளது. இந்த அணை உள்ள பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக நிரம்பியது.
மேலும் அணைக்கு அதிக அளவு தண்ணீர் வரத்து இருந்ததால் அணையை திறந்து தண்ணீரை வெளியேற்ற ஆந்திர மாநில நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதனால் அவர்கள் கிருஷ்ணாபுரம் அணை திறப்பது குறித்து தமிழக வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் உத்தரவின் பேரில், திருத்தணி ஆர்.டி.ஓ. சத்யா ஆலோசனை பேரில் கொசஸ்தலை ஆற்றங்கரையில் உள்ள கிராம மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தண்ணீர் திறப்பு
நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இந்த நீர் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் வெள்ளம் வந்து சேர்ந்தது.
இதனால் கீழ்கால்பட்டடை, சாமந்த வாடா, நெடியம் சொரக்காய்பேட்டை ஆகிய பகுதிகளில் தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கின.
இதனால் தரைப்பாலத்திற்கு மேல் செல்லும் தண்ணீரில் ஆபத்தான முறையில் பொதுமக்கள் கடந்து செல்கின்றனர். இதுவரை கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து 5 முறை தண்ணீர் திறந்து விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பூண்டி ஏரி
இதற்கிடையே, சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரியில் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த ஜூன் 18-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விடப்பட்டது.
இதனால் பூண்டி ஏரியின் உயரம் கிடு,கிடு வென்று உயர்ந்து வந்தது. இதனை கருத்தில் கொண்டு கடந்த மாதம் 20-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் அம்மபள்ளி அணியிலிருந்து பூண்டி ஏரிக்கு மழை நீர்வரத்து அதிகரித்தது. பூண்டி உயரம் 35 அடி ஆகும். நேற்று மதியம் 12 மணிக்கு நீர்மட்டம் 34 அடி ஆக உயர்ந்தது. 2.807 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
தண்ணீர் வெளியேற்றம்
ஏரிக்கு மழைநீர் வினாடிக்கு 1,500 கன அடி, கிருஷ்ணாபுரம் அம்மபள்ளி நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் நீர் வந்து கொண்டிருந்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று மதியம் 2 மணிக்கு பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் 3 மற்றும் 13-ம் எண் கொண்ட மதகு வழியாக தலா 500 கனஅடி வீதம் 1,000 கன அடி தண்ணீர் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.
பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் முத்தையா, செயற்பொறியாளர் பொதுப்பணித்திலகம், உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் ரமேஷ் ஆகியோர் சிறப்பு பூஜைகள் நடத்தி தண்ணீர் திறந்து விட்டனர்.
வெள்ள அபாயம்
இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பூண்டி ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் உபரி நீர் திறக்கப்பட்டது, இதனால் கொசஸ்தலை ஆறு பாயும் கரையோரம் கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆற்றம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எறையூர், பீமன் தோப்பு, கொரக்கன்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்தூர், பண்டிகாவனூர், ஜெகநாதபுரம், புதுக்குப்பம், கன்னிப்பாளையம், வன்னிபாக்கம், அசூவன்பாள்யாம், மடியூர், சீமா வரம், வெள்ளிவாயல் சாவடி, நாபாளையம், இடையான் சாவடி, மணலி, மணலிபுதுநகர், சடயான்குப்பம், எண்ணூர் உள்ளிட்ட 29 கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது,
Related Tags :
Next Story