மீஞ்சூர் அருகே வாலிபர் உயிருடன் எரித்துக்கொலை? போலீசார் விசாரணை


மீஞ்சூர் அருகே வாலிபர் உயிருடன் எரித்துக்கொலை? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 11 Oct 2021 6:56 PM IST (Updated: 11 Oct 2021 6:56 PM IST)
t-max-icont-min-icon

மீஞ்சூர் அடுத்த ஏரிக்கரையில் உடல் முழுவதும் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட வாலிபர் ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார். எரித்துக் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலையா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தீக்காயங்களுடன்...

மீஞ்சூர் அருகே நாலூர் பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்தவர் கோபிநாதன் (வயது 33). கூலித்தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் நாலூர் ஏரிக்கரை வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்தநிலையில் திடீரென அவர் உறவினர் ஒருவருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு, தன்னை 6 பேர் கொண்ட கும்பல் பெட்ரோல் ஊற்றி எரிப்பதாகவும், காப்பாற்றும்படி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ஏரிக்கரைக்கு சென்று பார்த்த போது, உடல் முழுவதும் எரிந்த நிலையில் தீக்காயங்களுடன் கோபிநாதன் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

சிகிச்சை பலனின்றி சாவு

இதனையடுத்து உடனடியாக அவரை மீட்டு, பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில், மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி கோபிநாதன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விசாரணை நடத்தினர். முன்விரோதம் காரணமாக கோபிநாதனை தீ வைத்து கொலை செய்தார்களா? அல்லது அவரே தற்கொலை செய்து கொண்டாரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் நாலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story