உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் கவர்னர் நேரடியாக தலையிட வேண்டும்
உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் கவர்னர் நேரடியாக தலையிட வேண்டும் என்று முன்னாள் எம்.எல்.ஏ. அன்பழகன் வலியுறுத்தினார்.
புதுச்சேரி, அக்.
உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் கவர்னர் நேரடியாக தலையிட வேண்டும் என்று முன்னாள் எம்.எல்.ஏ. அன்பழகன் வலியுறுத்தினார்.
கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான அன்பழகன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
அரசுக்கு தலைகுனிவு
மாநில தேர்தல் ஆணையத்தின் தான்தோன்றித்தனமான செயல்பாட்டால் தேர்தல் அட்டவணை ஐகோர்ட்டு தீர்ப்பின் மூலம் திரும்பப் பெறப்பட்டது. இது புதுவை அரசுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய நிகழ்வாகும்.
தற்போது மீண்டும் கடந்த 8-ந்தேதி புதிய தேர்தல் அட்டவணை மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இதிலும் பல்வேறு குளறுபடிகள் காணப் படுகின்றன.
சட்ட விரோதம்
அதாவது, புதுவை நகராட்சியில் ஏற்கனவே இருந்த 42 வார்டுகளை 33 ஆக குறைத்தும், உழவர்கரை நகராட்சியில் இருந்த 37 வார்டுகளை 42 வார்டுகளாக உயர்த்தியும் அட்டவணை வெளியிட்டது தவறான ஒன்றாகும். அதேபோன்று உள்ளாட்சி தேர்தலில் சுழற்சி முறையில் நகராட்சி தலைவர் பதவிக்கும், வார்டு கவுன்சிலர் பதவிக்கும் இடஒதுக்கீடு இருக்கவேண்டும்.
அப்படி செய்யாமல் 2006-ல் இருந்ததுபோன்றே புதுச்சேரி நகராட்சி தலைவர் பதவி பெண்களுக்கும், உழவர்கரை நகராட்சி தலைவர் பதவி ஆண்களுக்கும் ஒதுக்கப்பட்டதும் தவறானது.
புதுச்சேரி நகராட்சியில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 6 வார்டுகள் ஒதுக்கப்பட்டு இருக்கவேண்டும். ஆனால் 4 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது சட்டத்துக்கு விரோதமான செயலாகும்.
காலஅவகாசம்
மாநில தேர்தல் ஆணையத்தின் தன்னிச்சையான செயல்பாடுகள் மற்றும் இடஒதுக்கீடு விஷயத்தில் நடைபெற்று வரும் தவறுகள் ஆகியவற்றால் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு உள்ளிட்டவைகளை சீர்தூக்கிப் பார்த்து இந்த விஷயத்தில் கவர்னராகிய தாங்கள் நேரிடையாக தலையிட வேண்டும். முதல்-அமைச்சர், மாநில தேர்தல் ஆணையர், சட்ட வல்லுனர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தை கூட்டி அதில் எந்தவித தவறும் இல்லாத வகையில் உரிய கால அவகாசம் அளித்து உள்ளாட்சி தேர்தலை நடத்த தாங்கள் வழிவகை செய்யவேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story