‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தவறான வழிகாட்டி பலகை
நெல்லை டவுன் லாலாசத்திரம் முக்கு பஸ் நிறுத்தம் எதிரில் வழிகாட்டி பலகை ஒன்று உள்ளது. அதில் சங்கரன்கோவில், கோவில்பட்டி, மதுரைக்கு செல்லும் வழி என்று அம்பு குறியிட்டு காட்டப்பட்டு உள்ளது. அதன்படி சென்றால் புட்டாரத்தி அம்மன் கோவில், குடியிருப்பு பகுதிகளுக்கு மட்டுமே செல்ல முடியும். மாறாக, லாலாசத்திரம் முக்கில் இருந்து இடதுபுறமாக திரும்பினால் தான் சங்கரன்கோவில், கோவில்பட்டி, மதுரை போன்ற ஊர்களுக்கு ெசல்ல முடியும். எனவே, தவறான வழிகாட்டும் அந்த வழிகாட்டி பலகையை சரியாக அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
- பாலகிருஷ்ணன், நெல்லை டவுன்.
வேகத்துக்கு தடை வருமா?
வள்ளியூரில் சர்வீஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் அருகில் இருந்து பெரியகுளத்துக்கு செல்லும் சாலையில் ஏராளமான வீடுகளும், வயல்களும் உள்ளன. இதனால் அந்த சாலை வழியாக தினமும் ஏராளமானவர்கள் சென்று வருகின்றனர். அவர்கள் சர்வீஸ் சாலைக்கு வரும்போது, அங்கு வாகனங்கள் வேகமாக வருவதால் அடிக்கடி விபத்துகளில் சிக்கும் நிலை உள்ளது. எனவே, வாகனங்களின் வேகத்துக்கு தடை போடும் வகையில், சர்வீஸ் சாலையில் இருபுறத்திலும் வேகத்தடை அமைத்தால் பயன் உள்ளதாக இருக்கும்.
- தங்கமாரியப்பன், வள்ளியூர்.
மயானத்துக்கு கொட்டகை வேண்டும்
நாங்குநேரி தாலுகா மூலைக்கரைப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட எடுப்பல் கிராமத்தில் மயானம் உள்ளது. அங்கு கொட்டகை மற்றும் அடிபம்பு வசதி இல்லை. எனவே, அதுபோன்ற அடிப்படை வசதிகளை செய்து தர பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பசுபதிபாண்டியன், எடுப்பல்.
வெளிச்சம் பிறக்குமா?
திசையன்விளை-உவரி பைபாஸ் சாலை அமைத்து 2 ஆண்டுகள் ஆகியும் சாலையோரங்களில் மின்விளக்குகள் அமைக்கவில்லை. இதனால் அந்த சாலை இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக இரவில் அந்த வழியாக நடந்து செல்பவர்களும், வாகனங்களில் செல்வோரும் பெரிதும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, அடைக்கலம் காத்த விநாயகர் கோவில் அருகில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு வரும் ஏராளமான பக்தர்கள் சிரமப்படுகின்றனர். எனவே சாய்பாபா கோவில் சாலை-பைபாஸ் சாலை சந்திப்பிலாவது மின்விளக்கு அமைத்து வெளிச்சம் பிறக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
- தரகன்காடு நாமதுரை, திசையன்விளை.
சாலையோரம் குவியும் குப்பை
தென்காசி வடக்குரத வீதியில் குப்பை கொட்டுவதற்கு என்று தனியாக குப்பைத்தொட்டி இல்லை. இதனால் சாலையோரம் குப்பை கொட்டப்பட்டு குவிந்து கிடக்கிறது. பழைய பஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள முக்கியமான பகுதி என்பதால் தினமும் ஏராளமானவர்கள் இந்த வழியாக சென்று வருகின்றனர். அவர்கள் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதால், மூக்கை பொத்திக் கொண்டு தான் செல்கின்றனர். எனவே, அங்கு குப்பைத்தொட்டி அமைக்க சம்பந்தப்பட்டவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
- அய்யப்பன், தென்காசி.
தெருநாய்கள் தொல்லை
கடையம் யூனியன் முதலியார்பட்டி பஞ்சாயத்து காந்திநகர், ரகுமத்நகர், இந்திராநகர் ஆகிய பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள தெருக்கள், மெயின் ரோடு, பஸ் நிறுத்த பகுதிகளில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள், வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்புபவர்கள் என்று அனைத்து தரப்பினரும் அச்சத்துடன் செல்கின்றனர். ஆகையால் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
- பக்கீர் மைதீன், முதலியார்பட்டி.
குடிநீர் உறிஞ்சும் மின்மோட்டார்கள்
தூத்துக்குடி மாநகராட்சி 17-வது வார்டு லைசால்நகர் பகுதியில் 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இங்குள்ள சில வீடுகளில் மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவதால் மற்ற வீடுகளுக்கு சரியாக தண்ணீர் கிடைப்பது இல்லை. எனவே, இந்த பிரச்சினைக்கு அதிகாரிகள் தீர்வு காண வேண்டுகிறேன்.
- ஆலன் ஜோசுவா, மேலஅலங்காரதட்டு.
மீண்டும் பஸ் வருமா?
திருச்செந்தூரில் இருந்து அடைக்கலாபுரம் வழியாக நெல்லைக்கு 134 ‘பி’ பஸ்சும், தனியார் பஸ்சும் முன்பு இயக்கப்பட்டன. ஆனால் தற்போது பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை. இதனால் அடைக்கலாபுரத்தில் இருந்து நெல்லைக்கு செல்ல வேண்டுமானால், திருச்செந்தூருக்கு சென்றுதான் பஸ் ஏறி செல்ல வேண்டி உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே, திருச்செந்தூரில் இருந்து அடைக்கலாபுரம் வழியாக நெல்லைக்கு மீண்டும் பஸ்கள் இயக்க வேண்டுகிறேன். அவ்வாறு இயக்கினால் சண்முகபுரம், சுனாமிநகர், பிலோமிநகர், ராணி மகாராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களும் பெரிதும் பயன் அடைவர்.
- செல்வராஜ், அடைக்கலாபுரம்.
Related Tags :
Next Story