கொடைக்கானல் அருகே அருவியில் குளித்த தனியாா் நிறுவன ஊழியர் கதி என்ன? இரவு நேரமானதால் தேடும் பணி நிறுத்தம்
கொடைக்கானல் அருகே அருவியில் குளித்த தனியார் நிறுவன ஊழியரை தீயணைப்பு படையினர் தீவிரமாக தேடினர். இரவு நேரமானதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.
கொடைக்கானல் :
ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவருடைய மகன் அருண்குமார் (வயது 24). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று காலை தனது நண்பர்கள் 13 பேருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தார். பின்னர் அவர்கள் கொடைக்கானல்-பழனி சாலையில் உள்ள பேத்துப்பாறை, பாரதி அண்ணாநகர் அருகே உள்ள ஓராவி அருவியை பார்க்க சென்றனர்.
அப்போது அருண்குமார் மற்றும் அவருடைய நண்பர்கள் 3 பேரும் அருவியில் குளிக்க முடிவு செய்தனர். இதையடுத்து அவர்கள் அருவி பகுதியில் நீரில் இறங்கி குளித்தனர். கொடைக்கானல் பகுதியில் மழை பெய்து வருவதால் அருவியில் நீர்வரத்து அதிகமாக இருந்தது. குளிர்ந்த நீராக இருந்ததால் சிறிது நேரத்தில் அவருடைய நண்பர்கள் 3 பேரும் வெளியே வந்தனர்.
தீயணைப்பு படையினர்
ஆனால் அருண்குமார் மட்டும் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கினார். இதை பார்த்து பதறிபோன அவருடைய நண்பர்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்தனர். உடனே அப்பகுதி மக்கள் போலீஸ் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் கொடைக்கானல் ஆர்.டி.ஓ. முருகேசன், போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன், இன்ஸ்பெக்டர் பிரேம்சந்த் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் அன்பழகன் தலைமையில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
தேடும் பணி தீவிரம்
பின்னர் அருவி பகுதியில் சுமார் 50 அடி ஆழத்தில் கயிறு கட்டி இறங்கி தீயணைப்புபடையினரும், அந்த பகுதி மக்களும் தீவிரமாக தேடினர். காலை 11 மணியில் இருந்து மாலை 5 மணி வரை சுமார் 6 மணி நேரம் அவர்கள் தேடியும் அருண்குமார் கிடைக்கவில்லை.
அதன் பின்னர் இரவு நேரமானதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் தேடும் பணி நடைபெறுகிறது. இதற்காக நட்சத்திர ஏரியில் இருந்து படகு கொண்டு வரப்பட்டு, ஆழமான பகுதிக்கு சென்று தேடுவதற்கு மீட்புக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்க அருவியில் குளிக்க தடை என எச்சரிக்கை அறிவிப்பு பலகையை அந்த பகுதியில் வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story