புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 11 Oct 2021 4:41 PM GMT (Updated: 11 Oct 2021 4:41 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

‘தினத்தந்தி’ புகார்பெட்டி செய்தி எதிரொலி:
மாணவர்கள் செல்ல தனி பஸ் வசதி

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ்கள் நிற்காமல் செல்வதால் மாணவர்கள் பஸ்சின் பின்னால் ஓடிச்சென்று பஸ் படிக்கட்டுகளிலும், பஸ் பின்னால் உள்ள இரும்புக்கம்பியிலும் தொங்கி பயணம் செய்து வந்தது குறித்து ‘தினத்தந்தி’ நாளிதழின் புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகள் செல்ல தனி பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
-மாணவர்களின் பெற்றோர், வலங்கைமான்.

பாதாள சாக்கடை குழியால் விபத்து

மயிலாடுதுறை மயூரநாதர் மேல வீதியில் பகுதியில் பாதாள சாக்கடை குழி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பாதாள சாக்கடை குழியின் மூடி உடைந்து கிடக்கிறது. இதனால், கழிவுநீர் வெளியேறி சாலையில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி பாதாள சாக்கடை குழியின் மூடி உடைந்து கிடப்பது தெரியாமல் வாகனத்தில் வருபவர்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, உயிர்பலி எதுவும் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதாள சாக்கடை குழியின் மூடியை சீரமைக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-விக்னேஸ்வர், மயிலாடுதுறை.

பட்டுப்போன மரம் அகற்றப்படுமா?

திருவாரூர் மாவட்டம் மன்னாா்குடி வட்டம் பகுதியில் மேல நான்காம் தெரு உள்ளது. இந்த தெருவில் உள்ள மின்கம்பத்தின் அருகே பட்டுப்போன வேப்பமரம் ஒன்று ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த மரம் எப்போது வேண்டுமானாலும், மின்கம்பத்தின் மீது விழுந்து விபத்தை ஏற்படுத்த கூடிய நிலை உள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியை பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். குறிப்பாக மின்கம்பத்தில் உள்ள மின்கம்பிகள் மரத்துடன் பிணைந்துள்ளன.எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான நிலையில் உள்ள பட்டுபோன வேப்பமரத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-வெங்கடேசன், மன்னார்குடி.


Next Story