வாக்கு எண்ணிக்கை முடிவுகளை நன்கு சரிபார்த்த பின்னரே அறிவிக்க வேண்டும். தேர்தல் பார்வையாளர் சாந்தா உத்தரவு


வாக்கு எண்ணிக்கை முடிவுகளை நன்கு சரிபார்த்த பின்னரே அறிவிக்க வேண்டும். தேர்தல் பார்வையாளர் சாந்தா உத்தரவு
x
தினத்தந்தி 11 Oct 2021 10:40 PM IST (Updated: 11 Oct 2021 10:40 PM IST)
t-max-icont-min-icon

வாக்கு எண்ணிக்கை முடிவுகளை நன்கு சரிபார்த்த பின்னரே அறிவிக்க வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் பார்வையாளர் சாந்தா கூறினார்.

ராணிப்பேட்டை

வாக்கு எண்ணிக்கை முடிவுகளை நன்கு சரிபார்த்த பின்னரே அறிவிக்க வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் பார்வையாளர் சாந்தா கூறினார்.

ஆலோசனை கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வாக்கு எண்ணும் பணி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. தேர்தல் பார்வையாளர் சாந்தா தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் முன்னிலை வகித்தார். 

கூட்டத்தில் தேர்தல் பார்வையாளர் கூறியதாவது:-

நன்கு சரிபார்த்த பின்னர்

வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபட உள்ள அனைத்து அலுவலர்களும் நேர்மையாக பணியாற்ற வேண்டும். யாருடைய தலையீடும் இந்த வாக்கு எண்ணும் பணியில் இருக்கக் கூடாது. முடிவுகளை ஒன்றுக்கு இரண்டு முறை நன்கு சரிபார்கத்த பின்னரே அறிவிக்க வேண்டும். முடிவுகள் வெளியிட்ட பின் அதில் திருத்தம் என்று மீண்டும் அறிவித்தால் பிரச்சினைகள் ஏற்படும். ஆகவே தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இதில் கவனமுடன் பணியாற்ற வேண்டும்.

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவர் ஆகிய பதவிகளுக்கான முடிவுகள் ஒரு சில பஞ்சாயத்துகளில் சிறிய வாக்கு வித்தியாசத்தில் வரும். ஆகவே மிகவும் கவனமுடன் யாருக்கும் பாதகம் ஏற்படாத வண்ணம் சரியான முடிவுகளை அறிவிப்பது உறுதி செய்தல் வேண்டும். வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும். எவ்வித பிரச்சினைகளும் ஏற்படாதவாறு இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

நேர்மையாக

ஒவ்வொரு சுற்றுக்கும் குறைந்தது இரண்டு மணி நேரம் பிடிக்கும். வாக்குகளைப் பிரிக்கும் பணிகளில் அனைவரும் பதவிகளுக்கு ஏற்றவாறு பிரிப்பதை முறையாக மேற்கொள்ள வேண்டும். வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கு உணவு, டீ இவைகள் குறித்த நேரத்தில் வழங்கிட வேண்டும். மையத்திற்கு யாரும் செல்போன் எடுத்து வர அனுமதி கிடையாது. இதை காவல்துறையினர் முறையாக பரிசோதனை செய்து பணியாளர்கள், வேட்பாளர்களை அனுப்பி வைக்க வேண்டும்.

முடிவுகள் அறிவித்த பின்னர் அனைவரும் உடனடியாக வெளியேறும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். வாக்கு எண்ணும் மையத்தில் எவ்வித பிரச்சினைகளும் இன்றி நேர்மையாகவும், அமைதியாகவும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, நேர்முக உதவியாளர் மரியம் ஜெரினா, அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story