மருதுபாண்டியர் நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு கடும் கட்டுப்பாடு


மருதுபாண்டியர் நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு கடும் கட்டுப்பாடு
x
தினத்தந்தி 11 Oct 2021 11:02 PM IST (Updated: 11 Oct 2021 11:02 PM IST)
t-max-icont-min-icon

வருகிற 24,27-ந்தேதிகளில் மருதுபாண்டியர் நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. வாகன அனுமதிக்கு கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

சிவகங்கை,

வருகிற 24,27-ந்தேதிகளில் மருதுபாண்டியர் நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. வாகன அனுமதிக்கு கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

ஆலோசனை கூட்டம்

திருப்பத்தூரில் மாமன்னர் மருதுபாண்டியர் 220-வது நினைவு தினம் வருகிற 24-ந்தேதி அரசின் சார்பில் நடக்கிறது
அதனைத்தொடர்ந்து, வருகிற 27-ந்தேதி சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள மாமன்னர் மருதுபாண்டியர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்சசியும் மற்றும் வருகிற 30-ந்தேதி அன்று ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொனில் முத்துராமலிங்கத்தேவரின் குரு பூஜை விழாவும் நடைபெறுகிறது.
அரசு வழிகாட்டுதலின்படிஇந்த நிகழ்ச்சியை நடத்துவது குறித்து சமூக தலைவர்களுடனான ஆலோசனைக்கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டகலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடைபெற்றது.மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
மேற்கூரையில் அமரக்கூடாது
தற்பொழுது கொரோனா நோய்த்தொற்றுக்கான ஊரடங்கு காலம் நடைமுறையில் உள்ளதை கருத்தில் கொண்டு அரசு வழிகாட்டுதலை பின்பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.மரியாதை செலுத்த வரும் அரசியல் கட்சி தலைவர்கள் பிரதிநிதிகள் மற்றும் சமுதாய அமைப்புகளை சேர்ந்தவர்கள் (5 நபர்களுக்கு மிகாமல்) போலீசாரிடம் வாகனத்திற்கான முன் அனுமதியை பெற்று அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி உரிய சமூகஇடைவெளியை கடைபிடித்து மரியாதை செலுத்தலாம்.
23-ந்தேதிக்குள் முன்அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டும்.மரியாதை செலுத்த வருபவர்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே நினைவிடத்திற்கு வந்து செல்ல வேண்டும்.சொந்த வாகனங்களில் செல்ல மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.வாடகை வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. வாகனத்தின் மேற்கூரையில் அமர்ந்தும், வெளியில் நின்று கொண்டும் பயணம் செய்யக்கூடாது.வாகனங்களில் ஆயுதங்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் ஏதும் எடுத்துச் செல்லக்கூடாது. வரும் வழித்தடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
முகாம்
 வாகனத்தில் ஒலிபெருக்கிகள் பொருத்தி செல்லக்கூடாது. வாகனங்களில் சாதி, மத உணர்வுகளைத் தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்களை கட்டிச்செல்லவோ, கோஷங்கள் எழுப்பவோ கூடாது. போக்குவரத்து வழித்தடங்களில் இடையூறு செய்யும் வகையில் வாகனங்களை நிறுத்தக்கூடாது. நடைப்பயணமாகச் சென்று அஞ்சலி செலுத்த அனுமதியில்லை.
அஞ்சலி செலுத்தச் செல்பவர்கள் வழித்தடத்தில் பஸ் நிறுத்தங்களிலிருந்து அரசு பஸ்களில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அரசு பஸ்சில் படிக்கட்டிலோ, மேற்கூரையிலோ பயணம் செய்யக்கூடாது. அக்டோபர் 24-ந்தேதி மற்றும் 27-ந்தேதி நடைபெறும் 2 நாட்கள் நிகழ்ச்சிகளுக்கு வாகனம் அனுமதிக்காக கலெக்டர் அலுவலகத்தில் சிங்கிள் வின்டோ திட்டத்தின் மூலம் வருவாய்த்துறை, காவல்துறை அலுவலர்கள் கொண்ட தற்காலிக முகாம் அலுவலகம் அமைத்து வாகன அனுமதி வழங்கப்படும். இதுமட்டுமன்றி காவல்துறை இன்ஸ்பெக்டர் மூலமாகவும் அந்தந்தப்பகுதிகளில் விண்ணப்பித்து அனுமதி பெறலாம்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவிற்கு செல்ல அனுமதி வேண்டுவோர் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் அன்பு, வெற்றிச்செல்வம், பாஸ்கரன் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது).சவுந்திரராஜன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் முத்துக்கழுவன், உதவி ஆணையர் (கலால்).சிந்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story