நாமக்கல்லில் பெண் குழந்தை தொழிலாளர்கள் உள்பட 6 பேர் மீட்பு-அதிகாரிகள் நடவடிக்கை
நாமக்கல்லில் பணியில் ஈடுபடுத்தப்பட்ட 3 பெண் குழந்தை தொழிலாளர்கள் உள்பட 6 வளர் இளம் பருவ தொழிலாளர்களை அதிகாரிகள் மீட்டனர்.
நாமக்கல்:
குழந்தை தொழிலாளர்கள்
நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிக்கு வராத இளம் பருவ சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதை தொடர்ந்து கலெக்டர் ஸ்ரேயாசிங் அறிவுரையின்படி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சங்கர் தலைமையில், தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குனர் ஆண்டனி, தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் விஜய், மோகன், கோமதி, மாலா மற்றும் சைல்டு லைன் பணியாளர்கள் நாமக்கல்லில் குழந்தை தொழிலாளர் தொடர்பாக ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது நாமக்கல்லில் சேலம் மெயின் ரோடு, கொசவம்பட்டி மற்றும் கூலிப்பட்டி ஆகிய இடங்களில் பணியில் ஈடுபடுத்தப்பட்ட 2 பெண் குழந்தை தொழிலாளர்கள் உள்பட 3 வட மாநில குழந்தை தொழிலாளர்களும், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 3 சிறுவர்களும் மீட்கப்பட்டனர்.
2 ஆண்டுகள் சிறை
இது குறித்து நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சங்கர் கூறியதாவது:-
குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்ட நிறுவன உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. குழந்தை தொழிலாளர்கள் தொடர்பான ஆய்வுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும்.
குழந்தை மற்றும் வளர் இளம் பருவ தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தும் நிறுவன உரிமையாளர்கள் மீது குழந்தை மற்றும் வளர் இளம் பருவ தொழிலாளர் முறை சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டால் உரிமையாளருக்கு குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் வழங்க வழிவகை உள்ளது. எனவே தொழில் நடத்துபவர்கள் மற்றும் நிறுவன உரிமையாளர்கள் குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவ சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story