ஓசூரில் 145 நாட்களுக்கு பிறகு உழவர் சந்தை திறப்பு விவசாயிகள் மகிழ்ச்சி
ஓசூரில் செயல்பட்டு வந்த உழவர் சந்தை 145 நாட்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஓசூர்:
ஓசூரில் செயல்பட்டு வந்த உழவர் சந்தை 145 நாட்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
உழவர் சந்தை
ஓசூர் உழவர்சந்தை, கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த மே மாதம் 18-ந் தேதி மூடப்பட்டது. அதனைத்தொடர்ந்து பொதுமக்கள் வசதிக்காக ஓசூர் நகரில் ஆர்.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானம், ராமநாயக்கன் ஏரி பக்கமுள்ள பூங்கா மற்றும் முனீஸ்வர் நகர் உள்ளிட்ட பல இடங்களில் தற்காலிக சந்தைகள் அமைக்கப்பட்டு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. உழவர் சந்தையை திறக்க கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இந்தநிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று உழவர் சந்தையை திறக்க வலியுறுத்தி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி, 145 நாட்களுக்கு பிறகு நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் ஓசூர் உழவர் சந்தை திறக்கப்பட்டது. இதுகுறித்த தகவல், உழவர் சந்தையில் கடை வைத்துள்ள விவசாயிகளுக்கு நேற்று முன்தினம் தெரிவிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
இதனைத்தான் தொடர்ந்து நேற்று அதிகாலையில், குறைந்த அளவில் 10 விவசாயிகள் மட்டுமே உழவர்சந்தைக்கு வந்து எடை எந்திரங்களை வாங்கி வியாபாரத்தில் ஈடுபட்டனர். பெரும்பாலான விவசாயிகள், உழவர் சந்தைக்கு வியாபாரம் செய்ய வரவில்லை. இதனால் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் லகுமய்யா தலைமையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், மற்ற விவசாயிகளையும் உழவர் சந்தைக்கு வியாபாரம் செய்ய அழைத்து வந்தனர்.
ஆனால், காலதாமதமாக வந்ததாக கூறி விவசாயிகளுக்கு உழவர் சந்தை நிர்வாகம் எடை எந்திரங்களை வழங்க மறுத்தது. இதனால் விவசாயிகள் வியாபாரம் செய்ய முடியாமல் தவித்தனர். இதனையடுத்து நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் விவசாயிகள் அனைவருக்கும் எடை எந்திரங்கள் வழங்கப்பட்டன.
விவசாயிகள் மகிழ்ச்சி
பின்னர் அனைத்து விவசாயிகளும் உழவர் சந்தையில் வழக்கம்போல வியாபாரத்தில் ஈடுபட்டனர். ஓசூர் உழவர் சந்தையில் மொத்தம் 298 விவசாயிகள் வியாபாரம் செய்து வந்தனர். தற்போது பாதுகாப்பு காரணம் கருதி 150 விவசாயிகள் மட்டுமே கடைகள் வைத்து விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் நாளான நேற்று, குறைந்த எண்ணிக்கையில் நுகர்வோர் உழவர்சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி சென்றனர். 145 நாட்களுக்கு பிறகு ஓசூர் உழவர் சந்தை திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story