கிராம மக்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம்
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா போராட்டம்
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு பதிலாக, அங்கு வைக்கப்பட்டு இருந்த பெட்டியில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை போட்டு சென்றனர். மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்தும் பொதுமக்கள் வந்து கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
நெல்லை அருகே துலுக்கர்பட்டியைச் சேர்ந்த கிராம மக்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் முத்து வளவன் மற்றும் மகேந்திரன், தர்மர், மகேந்திரன் ஆகியோர் தலைமையில், கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய மனுவில், ‘நாங்கள் ஆதீன மடத்திற்கு சொந்தமான 300 ஏக்கர் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறோம். இந்த நிலையில் மற்றொரு நபர் அந்த நிலத்தை குத்தகைக்கு எடுத்ததாக கூறி, எங்களை காலி செய்யுமாறு கூறுகிறார். எனவே எங்களுக்கு குத்தகை உரிமையை மீட்டுத்தர வேண்டும். குத்தகை உரிமையை மாற்றக்கூடாது’ என்று தெரிவித்துள்ளனர்.
கட்டண உயர்வு
எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மாவட்ட தலைவர் சாகுல் அமீது உஸ்மானி, மாவட்ட துணை தலைவர் கனி, பொதுச்செயலாளர் ஹயாத் முகமது மற்றும் மாட்டு இறைச்சி வியாபாரி சங்கத்தினர் நேற்று மாடுகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், ‘மேலப்பாளையம் சந்தைக்கு ஆடு, மாடுகளை கொண்டு செல்வதற்கான நுழைவு கட்டணம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதனால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே அந்த கட்டண உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
தசரா திருவிழா
நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல்வகாப் எம்.எல்.ஏ. தலைமையில் அக்கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் வழங்கி மனுவில், ‘அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் நெல்லையில் தசரா திருவிழா நடத்த அனுமதிக்க வேண்டும்’ என்று தெரிவித்து இருந்தனர்.
‘நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு மீண்டும் சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவர் பெயரை சூட்ட வேண்டும்’ என்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் மாநில கொள்கை பரப்பு செயலாளர் வள்ளிக்கண்ணன் தேவர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர்.
மேல கருங்குளத்தை சேர்ந்த வனிதா வழங்கிய மனுவில், ‘எனது கணவர் லெனின் மீது போலீசார் பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். தற்போது அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று கூறி உள்ளார்.
அம்பை அருகே கல்லிடைக்குறிச்சி வைராவிகுளத்தைச் சேர்ந்த சரவணன் தனது 2 குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து வழங்கிய மனுவில், காணாமல் போன தனது மனைவியை கண்டுபிடித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story