துணை தபால் நிலையம் வேறு இடத்திற்கு மாற்றம்: பொதுமக்கள் சாலை மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு
முல்லையூரில் உள்ள துணை தபால் நிலையம் வேறு இடத்திற்கு மாற்றியதை கண்டித்து சாலை மறியலுக்கு முயன்ற பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
விராலிமலை:
துணை தபால் நிலையம் மாற்றம்
விராலிமலை அருகே உள்ள கத்தலூர் ஊராட்சிக்கு உட்பட்ட முல்லையூரில் துணை தபால் நிலையம் உள்ளது. இங்கு பணியாற்றி வரும் தேன்மொழி என்பவர் நிர்வாக காரணங்களுக்காக தபால் நிலைய இடத்தை மாற்றிக்கொள்வதாக அதிகாரிகளுக்கு மட்டும் தகவல் தெரிவித்துவிட்டு, அனுமதி கிடைப்பதற்கு முன்பாகவே துணை தபால் நிலையத்தில் இருந்த அலுவலக கோப்புகளை அருகிலுள்ள தென்னலூர் கிராமத்திற்கு மாற்றியுள்ளார்.
அதனைத்தொடர்ந்து நேற்று தபால் நிலையம் வந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தபால் நிலையம் மூடி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் விசாரித்ததில் துணை தபால் நிலையத்தை தென்னலூருக்கு மாற்றியது தெரியவந்தது.
மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மறியலில் ஈடுபட முல்லையூரில் ஒன்று திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விராலிமலை தாசில்தார் சரவணன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ராமசாமி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தபால் நிலையத்தை மீண்டும் அதே இடத்தில் தொடங்க வழிவகை செய்யப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதைத்தொடர்ந்து மாவட்ட துணை அஞ்சலக கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியனிடம், தாசில்தார் சரவணன் பேசி மீண்டும் அதே இடத்தில் துணை தபால் நிலையத்தை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதையடுத்து மீண்டும் தபால் நிலையம் அதே இடத்தில் தொடங்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
Related Tags :
Next Story