கீழப்புலியூர் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்-கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் மனு


கீழப்புலியூர் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்-கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் மனு
x
தினத்தந்தி 12 Oct 2021 12:46 AM IST (Updated: 12 Oct 2021 12:46 AM IST)
t-max-icont-min-icon

கீழப்புலியூர் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் காலிக்குடங்களுடன் பெண்கள் மனு கொடுத்தனர்.

தென்காசி:
கீழப்புலியூர் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் காலிக்குடங்களுடன் பெண்கள் மனு கொடுத்தனர்.

காலிக்குடங்களுடன் மனு

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று கீழப்புலியூர் மக்கள் காலிக்குடங்களுடன் வந்து மனு கொடுத்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கீழப்புலியூர் 33-வது வார்டு சிமெண்ட் ரோடு வடக்கு பகுதியில் தாமிரபரணி குடிநீருக்காக இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்புகள் கொடுக்கப்பட்டு 6 ஆண்டுகளாகியும் இதுவரை குடிநீர் கிடைக்கவில்லை. எனவே எங்கள் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

விவசாயிகள் 

இதேபோல் தென்காசி அருகே உள்ள மத்தளம்பாறை, சில்லரைபுரவு, திப்பணம்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், எங்களது கிராமங்களில் மலையடிவாரத்தில் எங்களுக்கு பாத்தியப்பட்ட விவசாய நிலத்தில் வாழை, மா, தென்னை, பாக்கு, கொய்யா, பலா மற்றும் நெல், மரவள்ளி கிழங்கு போன்ற பயிர்கள் செய்து வாழ்ந்து வருகிறோம். எங்களது விவசாய நிலங்களில் கடந்த 10 நாட்களாக காட்டு யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியும், மரங்களை வேரோடு சாய்த்தும் எங்களுக்கு மிகுந்த பொருளாதார இழப்பை ஏற்படுத்தி வருகிறது. விவசாய கூலிதொழிலாளர்கள் காட்டுயானைகளால் உயிருக்கு பயந்து வேலை செய்கிறார்கள். பகல் நேரங்களில் விவசாயிகள் தங்களின் நிலங்களுக்கு செல்ல முடியாத சூழல் உள்ளது.

எனவே காட்டுயானைகள் எங்களது விளைநிலங்களுக்கு வராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சோலார் மின்வேலி மற்றும் அகழிகள் அமைத்து தரவேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story