பஸ்சில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவரின் கால் முறிந்தது


பஸ்சில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவரின் கால் முறிந்தது
x
தினத்தந்தி 12 Oct 2021 2:11 AM IST (Updated: 12 Oct 2021 2:11 AM IST)
t-max-icont-min-icon

அரசு பஸ் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவரின் கால் முறிந்தது.

ஜெயங்கொண்டம்:

பின்பக்க சக்கரம் ஏறியது
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள குருவாலப்பர் கோவில் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரனின் மகன் ராஜ்குமார்(வயது 17). இவர் மகிமைபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை பள்ளிக்கு செல்ல குருவாலப்பர் கோவில் பஸ் நிறுத்தத்திற்கு வந்த ராஜ்குமார், காட்டுமன்னார்குடியில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி செல்லும் அரசு பஸ்சில் ஏறியுள்ளார். கூட்ட நெரிசல் காரணமாக பஸ் படிக்கட்டில் தொங்கியவாறு வந்தார். கை வலி ஏற்பட்டதால் பஸ்சை நிறுத்துமாறு ராஜ்குமார் சத்தம் போட்டதாக கூறப்படுகிறது. ஆனால் கூட்ட நெரிசல் காரணமாக கருப்பையா பஸ் நிறுத்தத்தில் நிறுத்தப்படாமல் பஸ் தொடர்ந்து சென்றது.
ஜெயங்கொண்டம்- சிதம்பரம் சாலையில் தாசில்தார் குடியிருப்பு அருகே பஸ் வந்தபோது படிக்கட்டில் இருந்து ராஜ்குமார் தவறி கீழே விழுந்தார். இதில் பஸ்சின் பின்பக்க சக்கரம் ஏறி கால் முறிந்தது. இதனைப் பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் ராஜ்குமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.
கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
இதற்கிடையே ராஜ்குமாரின் கால் முறிந்த சம்பவம் பற்றி அறிந்த ஏராளமான மாணவ- மாணவிகள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை முன்பாக குவிந்தனர். மேலும் அவரது பெற்றோர்கள், உறவினர்கள் அவரது நிலையை கண்டு கதறி அழுதனர். இதுபற்றி பள்ளி மாணவர்களிடம் கேட்டபோது, காலை 8.30 மணி அளவில் வர வேண்டிய பஸ் 8.50 மணிக்கு வந்ததாகவும், வேறு வழியின்றி அதில் ஏறி பயணம் செய்ததாகவும் கூட்ட நெரிசல் காரணமாக கை நழுவியதால் மாணவர் கீழே விழுந்ததாகவும், இதுபோன்ற விபத்து சம்பவம் நிகழாமல் இருக்க கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று பெற்றோர்களும், சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Next Story