கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக ரிதுராஜ் அவஸ்தி பதவி ஏற்பு


கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக ரிதுராஜ் அவஸ்தி பதவி ஏற்பு
x

கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக ரிதுராஜ் அவஸ்தி பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு கவர்னர் கெலாட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

பெங்களூரு:

தலைமை நீதிபதியாக நியமனம்

  கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்தவர் ஏ.எஸ்.ஒகா. அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பதவி காலியாக இருந்தது. இந்த நிலையில் கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக ரிதுராஜ் அவஸ்தி நியமனம் செய்யப்பட்டார்.

  அவர் தலைமை நீதிபதியாக பதவி ஏற்கும் நிகழ்ச்சி பெங்களூருவில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் அவருக்கு தலைமை நீதிபதியாக கவர்னர் கெலாட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, தலைமை செயலாளர் ரவிக்குமார் உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சட்ட பட்டம் பெற்றார்

  புதிய தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, 1986-ம் ஆண்டு லக்னோ பல்கலைக்கழகத்தில் சட்ட பட்டம் பெற்றார். பிறகு 1987-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ந் தேதி வக்கீலாக பணியாற்ற பதிவு செய்தார். அவர் லக்னோவில் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றினார். கடந்த 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ந் தேதி அலகாபாத் ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ந் தேதி அதே கோர்ட்டில் நிரந்தர நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story