மாவட்ட செய்திகள்

லாரி மீது கார் மோதல்; பிளஸ்-1 மாணவி, உறவினர் பலி + "||" + Car collision with truck; Plus-1 student, relative killed

லாரி மீது கார் மோதல்; பிளஸ்-1 மாணவி, உறவினர் பலி

லாரி மீது கார் மோதல்; பிளஸ்-1 மாணவி, உறவினர் பலி
பழுதாகி நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் பிளஸ்-1 மாணவி மற்றும் அவரது உறவினர் பரிதாபமாக இறந்தனர். மாணவியின் சகோதரி படுகாயம் அடைந்தார்.
லாரி மீது கார் மோதல்

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த பாடியநல்லூரில் உள்ள கரிகாலன் நகரில் வசிப்பவர் குமார். இவருடைய மகள் கனிஷ்கா (வயது 16). இவர் பொன்னேரி பஞ்செட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவரது தங்கை அஸ்விதா (14), 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர்கள் இருவருமே நேற்று காலை வழக்கம்போல் காரில் பள்ளிக்கு புறப்பட்டனர். இவர்களது உறவினரான நாகராஜ் (40) என்பவர், மாணவிகள் 2 பேரையும் காரில் அழைத்துச்சென்றார்.

சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் காரனோடை பாலத்தின் அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், பாலத்தின் அருகே பழுதாகி நின்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

பிளஸ்-1 மாணவி பலி

இந்த விபத்தில் கார் சுக்குநூறாக நொறுங்கியது. காரில் இருந்த மாணவி கனிஷ்கா மற்றும் காரை ஓட்டிச்சென்ற உறவினர் நாகராஜ் ஆகிய 2 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

விபத்தில் சிக்கி படுகாயத்துடன் உயிருக்கு போராடிய அஸ்விதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த சோழவரம் போலீசார், பலியான கனிஷ்கா மற்றும் நாகராஜ் ஆகியோரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ேமலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.