தண்டையார்பேட்டையில் காங்கிரஸ் கட்சி மவுன ஆர்ப்பாட்டம்: மாவட்ட தலைவரின் காரசாரமான பேச்சால் பரபரப்பு
தண்டையார்பேட்டையில் காங்கிரஸ் கட்சி மவுன ஆர்ப்பாட்டத்தின்போது சீமான் குறித்து மாவட்ட தலைவர் காரசாரமாக நிருபர்களிடம் பேட்டி அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மவுன ஆர்ப்பாட்டம்
சென்னை தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் எதிரே நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் மவுன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உத்தரபிரதேச மாநிலத்தில் 4 விவசாயிகள் கொல்லப்பட்டதை கண்டித்தும், உச்சநீதிமன்ற நீதிபதியின் தலைமையில் குழு அமைத்து இந்த வழக்கை விசாரிக்க வலியுறுத்தியும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை உள்பட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் நிருபர்களிடம் செல்வபெருந்தகை கூறும்போது, “நேற்று முளைத்த காளானாக இருக்கும் கட்சியை வைத்து கொண்டு சீமான், காங்கிரஸ் கட்சி தலைவர்களை விமர்சித்ததை கண்டிக்கிறோம். சீமான் காந்தியைவிட பெரியவர் போலவும், அம்பேத்கரைபோல பெரியவர் எனவும், தன்னைதான் புத்திசாலி எனவும் நினைத்துக்கொண்டு காங்கிரஸ் கட்சியினரை விமர்சித்து வருகிறார். யாரை பற்றி பேசுகிறோம் என தெரிந்து சீமான், நாவடக்கத்துடன் பேச வேண்டும். தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை பற்றி விமர்சித்தால் நாங்களே போராட்டங்களை முன்னெடுத்து நடத்துவோம்” என்றார்.
காரசாரமான பேச்சால் பரபரப்பு
அதன்பிறகு வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம், காங்கிரஸ் தலைவர்களை விமர்சித்து பேசிய சீமான் குறித்து காரசாரமாக நிருபர்களிடம் ஆவேசமாக பேட்டி அளித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவரை அருகில் இருந்த காங்கிரஸ் கட்சியினர் முதுகில் தட்டி, இயல்பு நிலைக்கு திரும்ப செய்தனர்.
அதேபோல் சென்னை பெரியார் நகர் தபால் நிலையம் முன்பு வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டில்லிபாபு தலைமையில் நடந்த மவுன ஆர்ப்பாட்டத்தில் அகரம் கோபி, பெரம்பூர் நிசார், கொளத்தூர் கோபால் உள்பட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வாயில் கருப்பு துணி கட்டி கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story