விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்; தொல்.திருமாவளவன் எம்.பி. பங்கேற்பு
பொன்னேரியில் வாலிபர் ஆணவ படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கண்டன ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம், ஆரணி அருகே காரணை கிராமத்தில் கடந்த மாதம் 14-ந் தேதி கவுதம் என்ற வாலிபர் வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ததற்காக ஆணவ படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தை கண்டித்து, திருவள்ளூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருவள்ளூரில் நேற்று நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கோபி நயினார், சித்தார்த்தன், குமணன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
மாநில நிர்வாகிகள் நீலவானத்து நிலவன், பாலசிங்கம், உதயபானு, பிரவீன், தளபதி சுந்தர், நீலன், அன்பரசு, செல்வம், பேரறிவாளன், அமரகவி, தமிழினியன், அருண் கவுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆணவ கொலை தடுப்பு சட்டம்
இதில் சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவுதம் மரணத்திற்கு நீதி கேட்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
பொன்னேரி காரணை கிராமத்தை சேர்ந்த கவுதம் என்பவர் வேறு சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதற்கு பழிக்குப்பழியாக சிலர் அவரை ஆணவ படுகொலை செய்துள்ளனர்.
இந்த வழக்கினை தமிழக அரசு சி.பி.சி.ஐ.டி. அல்லது ஐகோர்ட்டு நீதிபதி ஒருவரின் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.
இதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும். ஆணவ கொலை தடுப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற தமிழக முதல்-அமைச்சர் கவனத்திற்கு உடனடியாக கொண்டு செல்லப்படும் என கூறினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆணவ படுகொலை செய்யப்பட்டு இறந்த கவுதமின் மனைவி அம்லு என்பவர் தனது கைக்குழந்தையுடன் கலந்து கொண்டார்.
Related Tags :
Next Story