தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்தது


தூத்துக்குடி மாவட்டத்தில்  ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை  விறுவிறுப்பாக நடந்தது
x
தினத்தந்தி 12 Oct 2021 10:19 AM GMT (Updated: 12 Oct 2021 10:19 AM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்தது

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் நடந்தது.
உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களில் சாதாரண தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதே போன்று ஏற்கனவே தேர்தல் நடத்தப்பட்ட 28 மாவட்டங்களில் நிரப்பப்படாத பதவியிடங்கள் மற்றும் ஜூன் 2021 மாதம் வரை ஏற்பட்டு உள்ள காலியிடங்களுக்கும் தற்செயல் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள 48 பதவிக்கான வேட்புமனு தாக்கல் நடந்தது. இதில் 26 பதவிகளுக்கு மனுதாக்கல் செய்தவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதம் உள்ள 6 பஞ்சாயத்து தலைவர், 16 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நடந்தது. இதற்கான வாக்குப்பதிவு கடந்த 9-ந் தேதி 38 வாக்குச்சாவடிகளில் நடந்தது. இது தவிர தென்காசி மாவட்டத்துக்கு உட்பட்ட குருவிக்குளம் பஞ்சாயத்து யூனியனில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் உள்ள 42 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு நடந்தது.
வாக்கு எண்ணிக்கை
பதிவான வாக்குகள் எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில் தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி, ஸ்ரீவைகுண்டம், கருங்குளம், சாத்தான்குளம், ஓட்டப்பிடாரம், கயத்தாறு, விளாத்திகுளம், புதூர் ஆகிய இடங்களிலும், தென்காசி மாவட்டம் குருவிக்குளம் ஒன்றிய வாக்குகள், கோவில்பட்டி அய்யனேரி பகுதியில் உள்ள ஸ்ரீ உண்ணாமலை என்ஜினீயரிங் கல்லூரியில் வைத்தும் எண்ணப்பட்டன.
பாதுகாப்பு
இதைத் தொடர்ந்து வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில், 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 2 உதவி போலீஸ் சூப்பிரண்டுகள், 7 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் போலீஸ் சூப்பிரண்டு  நேரடியாக சென்று பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார்.


Next Story