அய்யலூர் சந்தையில் வரத்து குறைவால் தக்காளி விலை உயர்வு


அய்யலூர் சந்தையில் வரத்து குறைவால் தக்காளி விலை உயர்வு
x
தினத்தந்தி 12 Oct 2021 1:55 PM GMT (Updated: 12 Oct 2021 1:55 PM GMT)

அய்யலூர் சந்தையில் வரத்து குறைவால் தக்காளி விலை உயர்ந்து உள்ளது.


வடமதுரை:
வடமதுரை அருகே உள்ள அய்யலூரில் தக்காளிக்கு என்று தனி ஏலச்சந்தை உள்ளது. தினமும் நடைபெறும் இந்த சந்தையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு தக்காளிகள் பெட்டிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றது. திருவிழா மற்றும் முகூர்த்த நாட்களில் நாளொன்றுக்கு 50 டன் வரை தக்காளிகள் விற்பனை நடைபெறும். இதனால் வடமதுரை, அய்யலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் அதிக அளவில் தக்காளி விவசாயம் செய்து வருகின்றனர். உள்ளுர் தக்காளி வரத்து குறைவாக உள்ளபோது ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநில தக்காளிகள் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. எனவே மாவட்டத்தில் தக்காளியின் விலையை நிர்ணயிக்கும் முக்கிய சந்தையாக அய்யலூர் திகழ்ந்து வருகிறது.
தற்போது தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அய்யலூர் சந்தையில் உள்ளுர் தக்காளிகள் வரத்து குறைந்துள்ளது. மேலும் ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநில தக்காளிகளின் வரத்தும் குறைவாகவே உள்ளது. இதனால் தக்காளி விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது விலை உயர்ந்து ஒரு பெட்டி தக்காளி ரூ.250 முதல் ரூ.300 வரை நேற்று விற்பனை செய்யப்பட்டது. தக்காளி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Next Story