மாவட்ட செய்திகள்

கடமலை-மயிலை மற்றும் ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் 2 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை தி.மு.க. கைப்பற்றியது + "||" + By election result

கடமலை-மயிலை மற்றும் ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் 2 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை தி.மு.க. கைப்பற்றியது

கடமலை-மயிலை மற்றும் ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் 2 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை தி.மு.க. கைப்பற்றியது
கடமலை-மயிலை மற்றும் ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் இடைத்தேர்தல் நடந்த 2 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளையும் தி.மு.க. கைப்பற்றியது.
தேனி:
கடமலை-மயிலை மற்றும் ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் இடைத்தேர்தல் நடந்த 2 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளையும் தி.மு.க. கைப்பற்றியது.
இடைத்தேர்தல்
தேனி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சியில் 9 பதவிகள் காலியாக இருந்தன. இதற்கான வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இதில், வடபுதுப்பட்டி, பிச்சம்பட்டி, ராமகிருஷ்ணாபுரம், அழகர்நாயக்கன்பட்டி ஆகிய ஊராட்சிகளில் தலா ஒரு வார்டு உறுப்பினர் பதவிகள் காலியாக இருந்தன. இந்த பதவிகளுக்கு தலா ஒருவர் வீதம் மட்டுமே போட்டியிட்டதால் அவர்கள் 4 பேரும் போட்டியின்றி தேர்வாகினர்.
காலியாக இருந்த ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய 19-வது வார்டு கவுன்சிலர், கடமலை-மயிலை ஒன்றிய 8-வது வார்டு கவுன்சிலர், கதிர்நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர், ராஜதானி கிராம ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினர், போ.நாகலாபுரம் கிராம ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் ஆகிய 5 பதவிகளுக்கு மொத்தம் 17 பேர் போட்டியிட்டனர். இதற்கான இடைத்தேர்தல் கடந்த 9-ந்தேதி நடந்தது.
தி.மு.க. வெற்றி
தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை ஆண்டிப்பட்டி, கடமலை-மயிலை, போடி ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நேற்று நடந்தது. இதற்காக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஆண்டிப்பட்டி ஒன்றிய 19-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு, ஜெயா (தி.மு.க.), தீபா (அ.தி.மு.க.), வீரக்காள் (அ.ம.மு.க.), நாச்சியம்மாள் (நாம் தமிழர்) ஆகிய 4 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்தம் உள்ள 4,575 வாக்காளர்களில், 3,472 பேர் வாக்களித்தனர். இதில், தி.மு.க. வேட்பாளர் ஜெயா 1,918 வாக்குகள் பெற்று, அ.தி.முக. வேட்பாளர் தீபாவை விட 476 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தீபா 1,442 வாக்குகளும், வீரக்காள் 48 வாக்குகளும், நாச்சியம்மாள் 12 வாக்குகளும் பெற்றனர். பதிவான வாக்குகளில் 52 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.
கடமலை-மயிலை ஒன்றிய 8-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க., அ.தி.மு.க., அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட 6 பேர் போட்டியிட்டனர். இதில் 3,463 வாக்குகள் பதிவானது. இதில், தி.மு.க. வேட்பாளர் கருப்பையா 1,702 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சுயேச்சை வேட்பாளர் பிச்சைக்கனி 1,099 வாக்குகள் பெற்றதால், அ.தி.மு.க. வேட்பாளர் குணசேகரன் 573 வாக்குகள் பெற்று 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். தங்கப்பாண்டியன் (அ.ம.மு.க.) 25 வாக்குகளும், ஜெயக்குமார் (நாம் தமிழர்) 14 வாக்குகளும், ஈஸ்வரி (சுயேச்சை) ஒரு வாக்கும் பெற்றனர். பதிவான வாக்குகளில் 49 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.
ஊராட்சி தலைவர்
கதிர்நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு கந்தவேல், முருகலட்சுமி ஆகிய 2 பேர் போட்டியிட்டனர். அங்கு 1,010 வாக்குகள் பதிவாகின. இதில் முருகலட்சுமி 658 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவர் கந்தவேலை விட 317 வாக்குகள் அதிகம் பெற்றார்.
இதேபோல், ராஜதானி ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் பாப்பா, நாகலாபுரம் ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் பெருமாள் ஆகியோர் வெற்றி பெற்றனர். தேர்தலில் வெற்றி பெற்ற 5 பேருக்கும் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
ஆண்டிப்பட்டி ஒன்றிய 19-வது வார்டு கவுன்சிலராக வெற்றி பெற்ற ஜெயாவிடம், தேர்தல் நடத்தும் அலுவலரான ஊராட்சிகள் உதவி இயக்குனர் அண்ணாதுரை வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார். அப்போது ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் உடன் இருந்தார். பின்னர் தி.மு.க.வினர் அங்கிருந்து வைகை அணை சாலையில் உள்ள மகாராஜன் எம்.எல்.ஏ. வீடு வரை ஊர்வலமாக சென்றனர். அப்போது கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் வெற்றியை கொண்டாடினர்.