பற்றி எரிந்த சிலிண்டரை துணிச்சலாக வெளியே கொண்டு வந்து வீசிய பெண்
ஆரணி அருகே பற்றி எரிந்த சிலிண்டரை துரிதமாக செயல்பட்டு முகம் கருகியதை கூட பொருட்படுத்தாமல் வெளியே கொண்டு வந்து துணிச்சலுடன் வீசி தீ விபத்தை தடுத்த பெண்ணை தீயணைப்பு படையினர் பாராட்டினர்.
ஆரணி
ஆரணி அருகே பற்றி எரிந்த சிலிண்டரை துரிதமாக செயல்பட்டு முகம் கருகியதை கூட பொருட்படுத்தாமல் வெளியே கொண்டு வந்து துணிச்சலுடன் வீசி தீ விபத்தை தடுத்த பெண்ணை தீயணைப்பு படையினர் பாராட்டினர்.
ஆரணியை அடுத்த ராட்டிணமங்கலம் ஈ.பி.நகர் பகுதியை சேர்ந்தவர் பிச்சாண்டி. அரிசி ஆலை தொழிலாளி. இவருடைய மனைவி தரணி (வயது 40) நேற்று மாலை வீட்டில் சமையல் செய்வதற்காக சிலிண்டரை ஆன் செய்து கியாஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளார்.
அப்போது அதில் ஏற்பட்ட கசிவு காரணமாக சிலிண்டருக்கு வெளியே குபீரென தீப்பற்றியது. சுதாரித்துக்கொண்ட தரணி விபரீதத்தை தடுப்பதற்காக ரெகுலேட்டரை உடனடியாக அகற்றி விட்டு பற்றி எரிந்த கியாஸ் சிலிண்டரை தூக்கிக்கொண்டு வீட்டுக்கு வெளியே வந்தார்.
அப்போது தரணி முகத்தின் மீது தீ பற்றியதில் முகம் கருகியது. அதனையும் பொருட்படுத்தாது சமயோஜிதமாக செயல்பட்டு பற்றி எரிந்த சிலிண்டரை தூக்கி வீசினார். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக ஆரணி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த சிலிண்டரில் தீயை போராடி அணைத்தனர்.
முகம் கருகியதையும் பொருட்படுத்தாது விரைந்து செயல்பட்ட தரணியின் செயலால் அந்த பகுதியில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அவரை தீயணைப்பு படையினர் பாராட்டினர்.
Related Tags :
Next Story