விடிய, விடிய வாக்குகள் எண்ணிக்கை


விடிய, விடிய வாக்குகள் எண்ணிக்கை
x
தினத்தந்தி 12 Oct 2021 6:20 PM GMT (Updated: 12 Oct 2021 6:20 PM GMT)

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் விடிய, விடிய நடந்தது.

விழுப்புரம், அக்.13-

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது. இதில் விழுப்புரம்  மாவட்டத்தில் 28 மாவட்ட கவுன்சிலர், 293 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 688 கிராம ஊராட்சி தலைவர், 5,088 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 6,097 பதவியிடங்கள் உள்ளன.
இவற்றில் வேட்பு மனுதாக்கல் நிறைவடைந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடும்போது 688 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கு போட்டியிட்டவர்களில் 22 வேட்பாளர்களும், 5,088 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு போட்டியிட்டவர்களில் 369 பேரும் ஆக மொத்தம் 391 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 5,706 பதவியிடங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.

 5,706 பதவியிடங்களுக்கு

இதில் முதல்கட்டமாக கடந்த 6-ந் தேதியன்று செஞ்சி, முகையூர், கண்டமங்கலம், விக்கிரவாண்டி, ஒலக்கூர், திருவெண்ணெய்நல்லூர், வானூர் ஆகிய 7 ஒன்றியங்களுக்குட்பட்ட 16 மாவட்ட கவுன்சிலர், 158 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 360 கிராம ஊராட்சி தலைவர், 2,558 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என 3,092 பதவியிடங்களுக்கு தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் 10,873 பேர் போட்டியிட்டனர். இந்த ஒன்றியங்களில் மொத்தமுள்ள 7,55,224 வாக்காளர்களில் 6,31,785 பேர் வாக்களித்தனர். இதன் வாக்குப்பதிவு சதவீதம் 83.66 ஆகும்.
இதேபோல் 2-ம் கட்டமாக கடந்த 9-ந் தேதி காணை, கோலியனூர், மயிலம், மேல்மலையனூர், மரக்காணம், வல்லம் ஆகிய 6 ஒன்றியங்களுக்குட்பட்ட 12 மாவட்ட கவுன்சிலர், 135 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 306 கிராம ஊராட்சி தலைவர், 2,161 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என 2,614 பதவியிடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் 8,955 பேர் போட்டியிட்டனர். இந்த ஒன்றியங்களில் மொத்தமுள்ள 6,30,783 வாக்காளர்களில் 5,38,144 பேர் வாக்களித்தனர். இதன் வாக்குப்பதிவு சதவீதம் 85.31 ஆகும். மொத்தத்தில் 2 கட்ட தேர்தலிலும் விழுப்புரம் மாவட்டத்தில் சராசரியாக 84.41 சதவீத வாக்குகள் பதிவானது. தேர்தல் முடிந்ததும் அதில் பதிவான வாக்குச்சீட்டுகள் அடங்கிய வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு அந்தந்த ஒன்றியங்களுக்குட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அந்த அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

வாக்கு எண்ணிக்கை

இந்நிலையில் 2 கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. முகையூர் ஒன்றியத்துக்கு அரகண்டநல்லூர் ஸ்ரீலட்சுமிவித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ. பள்ளி, திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்துக்கு அங்குள்ள காந்தி நினைவு மேல்நிலைப்பள்ளி, காணை ஒன்றியத்துக்கு விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, கோலியனூர் ஒன்றியத்துக்கு விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கண்டமங்கலம் ஒன்றியத்துக்கு கெங்கராம்பாளையம் ஐ.எப்.இ.டி. பொறியியல் கல்லூரி, விக்கிரவாண்டி ஒன்றியத்துக்கு முண்டியம்பாக்கம் ஸ்ரீராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஒலக்கூர் ஒன்றியத்துக்கு திண்டிவனம் அண்ணா பொறியியல் கல்லூரி, மயிலம் ஒன்றியத்துக்கு கொல்லியங்குணம் பவ்டா கலை அறிவியல் கல்லூரி, மரக்காணம் ஒன்றியத்துக்கு அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வானூர் ஒன்றியத்துக்கு ஆகாசம்பட்டு ஸ்ரீஅரவிந்தர் கலை அறிவியல் கல்லூரி, செஞ்சி ஒன்றியத்துக்கு மேல்களவாய் டேனி கல்வியியல் கல்லூரி மற்றும் டேனி மெட்ரிக் பள்ளி, வல்லம் ஒன்றியத்துக்கு களையூர் ராஜாதேசிங்கு பாலிடெக்னிக் கல்லூரி, மேல்மலையனூர் ஒன்றியத்துக்கு அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி என 13 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டன.
இப்பணி சரியாக காலை 8 மணிக்கு தொடங்கியது. இதற்காக அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த அறை கதவின் சீல், வேட்பாளர்கள் முன்னிலையில் அகற்றப்பட்டது. பின்னர் அங்கிருந்து வாக்குப்பெட்டிகள் மற்றொரு அறைக்கு வேட்பாளர்களின் முன்னிலையில் கொண்டு செல்லப்பட்டு அந்த வாக்குப்பெட்டியில் உள்ள சீல் பிரிக்கப்பட்டு பதவி வாரியாக வாக்குச்சீட்டுகள் 4 வண்ண நிறத்தின் அடிப்படையில் பிரித்து எடுக்கப்பட்டன. இதனிடையே ஒன்றியம் வாரியாக தபால் வாக்குகள் பிரிக்கப்பட்டு எண்ணும் பணி தனி அறையில் நடந்தது. தபால் வாக்குகள் எண்ணும் பணி காலை 8.30 மணிக்கு தொடங்கி அவை எண்ணி முடித்ததும் ஒலிப்பெருக்கி மூலமாக முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

தனித்தனி அறைகளில்

அதன் பிறகு வாக்குப்பெட்டிகளில் பதிவான வாக்குச்சீட்டுகள் அந்தந்த வாக்கு எண்ணும் அறைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 4 பதவிகளுக்கும் தனித்தனியாக உருவாக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணும் அறைகளுக்கு கொண்டு வரப்பட்டு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இப்பணிகள் ஆரம்பிக்க ஒவ்வொரு ஒன்றியத்திலும் 9 மணி முதல் 9.30 மணி வரை ஆனது.
இதில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர் ஆகிய பதவிகளுக்கு பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு வாக்கு எண்ணும் அறைகளில் 12 மேஜைகளும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு 30 மேஜைகளும் போடப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டன. ஒவ்வொரு ஒன்றியத்திலும் 7 முதல் 10 சுற்றுகளாக வாக்குகள் எண்ண முடிவு செய்யப்பட்டு அப்பணிகள் நடந்தன.

உரிய அனுமதிச்சீட்டு

ஒவ்வொரு வாக்கு எண்ணும் அறையிலும் சின்னம் வாரியாக வாக்குச்சீட்டுகளை பிரித்து போடவும், அவற்றை எண்ணி முடிவுகளை சொல்வதற்கும் தனியாக பெரிய மேஜை அமைக்கப்பட்டு அதை சுற்றிலும் இரும்புக்கம்பிகளால் வேலி போடப்பட்டிருந்தது. அதன் வெளியே நின்று வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் வாக்கு எண்ணிக்கையை நேரடியாக பார்த்தனர். ஒவ்வொரு சுற்று முடிவிலும் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம், யார், யார் முன்னிலை போன்ற விவரங்களை ஒலிப்பெருக்கி மூலம் தேர்தல் அலுவலர்கள் அறிவித்தனர்.
வாக்கு எண்ணும் மையத்துக்குள் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் அந்தந்த பதவிகளுக்கான வேட்பாளர்கள், அவர்களது முகவர்களுக்கு ஏற்கனவே உரிய அனுமதி சீட்டு வழங்கப்பட்டு அந்த அனுமதி சீட்டுடன் வந்தவர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் வந்து செல்வதற்கும், போலீசார் மற்றும் அதிகாரிகள் வருவதற்கும் தனித்தனியாக வழிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள்

தற்போது கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றியே வாக்கு எண்ணிக்கையை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதால் வாக்கு எண்ணும் மையத்திற்கு பணிக்கு வந்த அலுவலர்கள், ஊழியர்கள், போலீசார் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் கருவியின் உதவியுடன் உடல் வெப்பநிலையை பரிசோதித்த பிறகு அவர்களுக்கு சானிடைசர் திரவம் கொடுத்து அதை கைகளை சுத்தம் செய்ய பயன்படுத்த வைத்து உள்ளே அனுமதிக்கப்பட்டனர். முக்கியமாக முக கவசம் அணிந்து வந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. உரிய அனுமதி சீட்டு இல்லாத மற்ற நபர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
அதுபோல் வாக்கு எண்ணும் அறையில் போதிய இடைவெளிகளுடன் மேஜைகள் போடப்பட்டிருந்தன. அந்த அறையில் பணியில் ஈடுபட்ட அனைவரும் முக கவசம், கையுறை அணிந்திருந்தனர். அவர்கள் அவ்வப்போது சானிடைசர் திரவத்தை பயன்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

கேமரா மூலம் கண்காணிப்பு

மாவட்டத்தில் உள்ள 13 வாக்கு எண்ணும் மையங்களிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற ஒவ்வொரு மேஜையும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டதோடு, வாக்கு எண்ணிக்கை நிகழ்வுகள் வீடியோ கேமரா மூலமும் பதிவு செய்யப்பட்டது.
மேலும் வாக்கு எண்ணிக்கையின்போது ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்கும் வகையில் அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன் மேற்பார்வையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தலைமையில் ஏராளமான போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

முடிவுகள் வெளியாக தாமதமாகும்

ஊரக உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்றதால் அவற்றை முழுவதுமாக எண்ணி முடிப்பதில் காலதாமதம் ஏற்படக்கூடும் என்பதால் நாளைதான் (அதாவது இன்று) வாக்கு எண்ணிக்கை முடிவுகள் முழுமையாக  கிடைக்க வாய்ப்புள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை பொறுத்தவரை முதல்கட்டமாக திருக்கோவிலூர், திருநாவலூர், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம் ஆகிய 4 ஒன்றியங்களுக்குட்பட்ட 1,701 பதவியிடங்களுக்கு நடைபெற்றதேர்தலில் 5,717 பேர் போட்டியிட்டனர். இத்தேர்தலில் மொத்தமுள்ள 4,73,678 வாக்காளர்களில் 3,89,598 பேர் வாக்களித்தனர். இதன் வாக்குப்பதிவு சதவீதம் 82.25 ஆகும். இதேபோல் 2-ம் கட்டமாக கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், தியாகதுருகம், கல்வராயன்மலை ஆகிய 5 ஒன்றியங்களுக்குட்பட்ட 1,584 பதவியிடங்களுக்கான தேர்தலில் 5,010 பேர் போட்டியிட்டனர். இத்தேர்தலில் மொத்தமுள்ள 4,90,100 வாக்காளர்களில் 4,04,791 பேர் வாக்களித்தனர். இதன் வாக்குப்பதிவு சதவீதம் 82.59 ஆகும். பதிவான வாக்குச்சீட்டுகள் அடங்கிய வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு அந்தந்த ஒன்றியங்களுக்குட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அந்த அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன. வாக்குகள் அனைத்தும் நேற்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. வாக்குகள் எண்ணும் பணி விடிய,விடிய நடத்தது.

Next Story