உள்ளாட்சி தேர்தலில் கிடைத்த வெற்றி தி.மு.க. ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று-அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்


உள்ளாட்சி தேர்தலில் கிடைத்த வெற்றி தி.மு.க. ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று-அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்
x
தினத்தந்தி 12 Oct 2021 7:49 PM GMT (Updated: 12 Oct 2021 7:49 PM GMT)

உள்ளாட்சி தேர்தலில் கிடைத்த வெற்றி தி.மு.க. ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று என அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறினார்.

காரைக்குடி
உள்ளாட்சி தேர்தலில் கிடைத்த வெற்றி தி.மு.க. ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று என அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறினார்.
மருத்துவ திட்டம்
காரைக்குடி அருகே கோட்டையூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட தொடக்க விழா மற்றும் மக்களை தேடி மருத்துவ முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். காரைக்குடி எம்.எல்.ஏ. மாங்குடி மற்றும் மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. தமிழரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:- 
மறைந்த கருணாநிதியின் ஆட்சி காலத்தில் வரும் முன் காப்போம் என்ற திட்டம் தொடங்கப்பட்டு ஏழை, எளிய மக்கள் பயன்பெற்று வந்தனர். இதுதவிர பல்வேறு திட்டங்களையும் கருணாநிதி செய்துள்ளார். அதன் பின்னர் ஆட்சி மாற்றம் காரணமாக அவரது பல்வேறு திட்டங்கள் நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் கருணாநிதியின் வழியில் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு திட்டத்திற்கும் புத்துயிர் கொடுத்து செயல்படுத்துவது மட்டுமல்லாமல் அவற்றை பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் கண்காணித்து வருகிறார். தற்போது மக்களை தேடி மருத்துவம் என்ற சிறப்பான திட்டத்தை செயல்படுத்தி உள்ளார். இந்த திட்டம் மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களில் தலா 3 மருத்துவ முகாம்கள் வீதம் மொத்தம் 36 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.
ஊட்டச்சத்து பெட்டகம்
ரத்த பரிசோதனை, எக்ஸ்ரே, கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை, புற்று நோய்க்கான பரிசோதனை, கண் பரிசோதனை என அனைத்து பரிசோதனைகளும் செய்யப்படும். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 35 ஆயிரத்து 731 பேர் வரை பயன் பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். 
இதைதொடர்ந்து 5 பயனாளிகளுக்கு கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தில் மருத்துவ காப்பீட்டு அட்டையும், 5 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், 5 பள்ளி மாணவர்களுக்கு காணொளி திட்டத்தில் இலவச மூக்கு கண்ணாடிகளையும் அமைச்சர் வழங்கினார். 

Next Story