பணத்தை இரட்டிப்பு செய்வதாக வாலிபரிடம் ரூ.92 ஆயிரம் மோசடி


பணத்தை இரட்டிப்பு செய்வதாக வாலிபரிடம் ரூ.92 ஆயிரம் மோசடி
x
தினத்தந்தி 12 Oct 2021 8:08 PM GMT (Updated: 12 Oct 2021 8:08 PM GMT)

பணத்தை இரட்டிப்பு செய்வதாக வாலிபரிடம் ரூ.92 ஆயிரம் மோசடி

திருச்சி, அக்.13-
திருச்சி, ஸ்ரீரங்கம் ஜெ.ஜெ. நகர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 25). மகளிர் சுய உதவிகுழுக்களிடம் பணம் வசூல் செய்யும் முகவராக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இவருடைய செல்போன் எண்ணுக்கு ஆன்லைன் பிசினஸ் என்ற பெயரில் எஸ்.எம்.எஸ். ஒன்று முன்பின் தெரியாத செல்போன் எண்ணில் இருந்து வந்துள்ளது. உடனே, விக்னேஷ் அந்த எண்ணை வாட்ஸ் - அப் மூலம் தொடர்பு கொண்டு அந்த எஸ்.எம்.எஸ்.குறித்து விசாரித்துள்ளார். நான் அனுப்பும் லிங்கை கிளிக் செய்து, பதிவு செய்து கொண்டால் யூசர்நேம்-பாஸ்வேர்டு அனுப்புவோம். அதை பயன்படுத்தி ரூ.100 செலுத்தினால், அது இரு மடங்காக கிடைக்கும் (அதாவது ரூ.200) என்று அதில் பேசிய மர்ம நபர் கூறியுள்ளார். இதை நம்பிய விக்னேஷ், முதலில் ரூ.100 அனுப்பியுள்ளார். அதற்கு இவருடைய கணக்கில் ரூ.200 திரும்ப கிடைத்துள்ளது. பின்னர் ரூ.200 செலுத்தியுள்ளார். அதற்கு ரூ.420 திரும்ப கிடைத்துள்ளது. அதனால் மகிழ்ச்சி அடைந்த விக்னேஷ், ரூ.500, ரூ.1000, என்று ரூ.92 ஆயித்து 700 வரை செலுத்தியுள்ளார். அதற்கு அவருக்கு பணம் இரட்டிப்பானது. இதைத் தொடர்ந்து அந்த பணத்தை தனது வங்கிக் கணக்குக்கு மாற்ற முயன்றுள்ளார். ஆனால் அந்த தொகையை அவருடைய வங்கி கணக்குக்கு மாற்ற முடியவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர், சம்பந்தப்பட்ட செல்போன் எண்ணை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது தொடர்பு கொள்ள முடியவில்லை. அப்போதுதான், மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த விக்னேஷ் இதுகுறித்து திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் சைபர்கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிந்துநதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story