போக்குவரத்து நெரிசலால் அவதிப்படும் வாகன ஓட்டிகள்


போக்குவரத்து நெரிசலால் அவதிப்படும் வாகன ஓட்டிகள்
x
தினத்தந்தி 12 Oct 2021 8:12 PM GMT (Updated: 12 Oct 2021 8:12 PM GMT)

போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

அரியலூர்:

போக்குவரத்து நெருக்கடி
அரியலூரில் பல இடங்களில் தினமும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. மார்க்கெட் தெரு, செந்துறை சாலை 4 ரோடு பகுதி, தேரடி, பெருமாள் கோவில் தெரு, சின்னக்கடை தெரு ஆகிய இடங்களில் பொருட்களை வாங்க வரும் பொதுமக்களில் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள், தங்களது வாகனங்களை சாலையில் நிறுத்தி விடுகின்றனர். இதனால் அந்த வழியாக வரும் கார், லாரி போன்ற வாகனங்கள் செல்ல காலதாமதம் ஏற்படுவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது.
பல்லவன், வைகை, குருவாயூர் போன்ற ரெயில்களில் அரியலூர் ரெயில் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளை அழைத்துச்செல்லும் ஆட்டோக்களின் போக்குவரத்து தினமும் காலை 10 மணியில் இருந்து இரவு 7 மணி வரை அதிகமாக உள்ளது. மார்க்கெட் தெருவில் சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி, பெண்கள் உயர்நிலைப்பள்ளி, மாவட்ட நீதிமன்றம், பஸ் நிலையம் மற்றும் பல்வேறு அரசு அலுவலகங்கள் இருப்பதால் பஸ்கள் அதிக அளவில் வந்து செல்கின்றன. இதனால் போக்குவரத்து தடை ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். அடுத்த மாதம்(நவம்பர்) 4-ந் தேதி தீபாவளி பண்டிகை வருவதால் தற்போது அரியலூர் பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை
மேலும் பெருமாள் கோவில் தெருவில் 80 அடி அகலத்தில் இருந்த சாலைகள் மிகவும் குறுகிவிட்டன. அந்த பகுதி முழுவதும் வணிக வளாகமாக மாறிவிட்டது. சாலையின் ஓரத்தில் செங்கல், கருங்கல் ஜல்லி, மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து விடுகிறார்கள். மினி லாரி, தட்டு ரிக்‌ஷா ஆகியவை கோயிலின் அருகே நிற்பதால் பெருமாள் கோவிலுக்கு செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
பெருமாள் கோவில் தெருவில் நீதிமன்றமும் உள்ளது. பண்டிகை காலங்கள், திருமணம் நடக்கும் நாட்களில் பெருமாள் கோவில் தெருவில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் தற்போது ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில்லை. எனவே போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சரி செய்ய வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் கோரிக்கை ஆகும்.

Next Story