ஏற்காடு மலைப்பகுதியில் மண் சரிவு; 2-வது நாளாக போக்குவரத்து துண்டிப்பு-கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு விரைந்து சீரமைக்க உத்தரவு
ஏற்காடு மலைப்பகுதியில் மண் சரிவால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனை கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு விரைந்து சீரமைக்க உத்தரவிட்டுள்ளார்.
ஏற்காடு:
ஏற்காடு மலைப்பகுதியில் மண் சரிவால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனை கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு விரைந்து சீரமைக்க உத்தரவிட்டுள்ளார்.
ஏற்காட்டில் மழை
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக மழைபெய்து வந்தது. மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்காடு- சேலம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஏற்காட்டில் இருந்து சேலம் செல்லும் மக்களும், சேலத்தில் இருந்து ஏற்காடுக்கு செல்லும் மக்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.
சாலை துண்டிப்பு
இதைதொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் கொண்டு மண்சரிவை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இரவு நீண்டநேரம் ஆனதால் போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது. அதாவது குப்பனூர் வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. தொடர்ந்து இரவு மழை பெய்தது. இதனால் அந்தசாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத வகையில் 2-வது நாளாக முற்றிலும் போக்குவரத்து தடைபட்டது.
கலெக்டர் பார்வையிட்டார்
இதற்கிடையே நேற்று காலையில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தை மாவட்ட கலெக்டர் கார்மேகம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது பணிகளை விரைந்து முடித்து போக்குவரத்தை தொடங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் கலெக்டர் கார்மேகம் நிருபர்களிடம் கூறுகையில், மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் நெடுஞ்சாலைத்துறை குழுக்கள் மூலம் சீரமைப்பு பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. 2 நாட்களில் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அதுவரை வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதியில் ஆங்காங்கே மழை பெய்து வருவதால் பொதுமக்கள் கவனமாக பயணம் செய்ய வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story