சேலத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல்: மாவட்ட ஊராட்சி 10-வது வார்டை தி.மு.க. கைப்பற்றியது-பனமரத்துப்பட்டி 9-வது வார்டிலும் தி.மு.க. வெற்றி


சேலத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல்: மாவட்ட ஊராட்சி 10-வது வார்டை தி.மு.க. கைப்பற்றியது-பனமரத்துப்பட்டி 9-வது வார்டிலும் தி.மு.க. வெற்றி
x
தினத்தந்தி 12 Oct 2021 10:29 PM GMT (Updated: 12 Oct 2021 10:29 PM GMT)

சேலம் மாவட்ட ஊராட்சி 10-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றார். பனமரத்துப்பட்டி 9-வது வார்டையும் தி.மு.க. கைப்பற்றியது.

சேலம்:
சேலம் மாவட்ட ஊராட்சி 10-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றார். பனமரத்துப்பட்டி 9-வது வார்டையும் தி.மு.க. கைப்பற்றியது.
மாவட்ட ஊராட்சி உறுப்பினர்
சேலம் மாவட்ட ஊராட்சி 10-வது வார்டு உறுப்பினர் மற்றும் பனமரத்துப்பட்டி ஒன்றியம் 9-வது வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு கடந்த 9-ந் தேதி தேர்தல் நடந்தது. தி.மு.க. சார்பில் சண்முகம், அ.தி.மு.க. சார்பில் எம்.ஆர்.முருகன், நாம் தமிழர் கட்சி சார்பில் பெ.பழனிசாமி, தே.மு.தி.க. சார்பில் சிவலிங்கம், அ.ம.மு.க.சார்பில் மு.மணிகண்டன் உள்பட 11 பேர் களத்தில் போட்டியிட்டனர். அப்படி இருந்தும் இந்த தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவியது. 
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து நேற்று எண்ணப்பட்டன. வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். மொத்தம் 10 டேபிள்களில் வைத்து ஓட்டுகள் எண்ணப்பட்டன. மின்னணு எந்திரம் பயன்படுத்தாமல் ஓட்டுச்சீட்டு என்பதால் காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை இரவு வரை நீடித்தது.
தி.மு.க. வெற்றி
முதல் சுற்றின் முடிவில் தி.மு.க. வேட்பாளர் கு.சண்முகம் 1,673 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் எம்.ஆர்.முருகன் 1,413 வாக்குகள் பெற்றிருந்தார். அதன்பிறகு நடந்த அடுத்தடுத்த சுற்றுகளிலும் தி.மு.க. வேட்பாளர் கு.சண்முகமே அதிக வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் இருந்தார். முடிவில், தி.மு.க. வேட்பாளர் கு.சண்முகம், அ.தி.மு.க. வேட்பாளர் எம்.ஆர். முருகனை விட 10 ஆயிரத்து 472 வாக்குகள் கூடுதல் பெற்று வெற்றி பெற்றார்.
வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை தேர்தல் நடத்தும் அலுவலரும், மகளிர் திட்ட அலுவலருமான செல்வம், மாவட்ட ஊராட்சி செயலாளர் சேகர் ஆகியோர் வழங்கினர். அப்போது தலைமை பொதுக்குழு உறுப்பினர் கார்த்திகேயன், மாநில பொதுக்குழு உறுப்பினர் குபேந்திரன், ஓமலூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் செல்வகுமரன், ரமேஷ் உள்பட பலர் உடன் இருந்தனர். இந்த வெற்றியை தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
கடந்த முறை நடந்த மாவட்ட ஊராட்சி 10-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த மணி வெற்றி பெற்றிருந்தார். அதன்பிறகு நடந்த சட்டசபை தேர்தலில் அவர் ஓமலூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்றதால் காலியாக இருந்த பதவிக்கு தற்போது தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அந்த உறுப்பினர் பதவியை தி.மு.க. கைப்பற்றியுள்ளது.
தி.மு.க. வேட்பாளர் வெற்றி
பனமரத்துப்பட்டி ஒன்றியம் 9-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தி.மு.க. சார்பில் சுரேஷ்குமார், அ.தி.மு.க. சார்பில் மாணிக்கம் உள்பட 5 பேர் போட்டியிட்டனர். 9-வது வார்டில் பதிவான வாக்குகள் பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து எண்ணப்பட்டன. இதில் தி.மு.க வேட்பாளர் க.சுரேஷ்குமார் 2,993 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் மாணிக்கத்திற்கு 320 வாக்குகள் கிடைத்தது. இதனால் தி.மு.க. வேட்பாளர் சுரேஷ்குமார் 1,771 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஏற்கனவே நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் 9-வது வார்டு உறுப்பினராக இருந்த தி.மு.க.வை சேர்ந்த குமார் என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். ஆனால் அவர் திடீரென இறந்துவிட்டதால் அந்த பதவிக்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலிலும் 9-வது வார்டில் தி.மு.க.வே வெற்றி வாகை சூடியுள்ளது.

Next Story