உதவுவது போல் நடித்து வயதான தம்பதியிடம் நகை, பணம் மோசடி


உதவுவது போல் நடித்து வயதான தம்பதியிடம் நகை, பணம் மோசடி
x
தினத்தந்தி 13 Oct 2021 11:17 AM IST (Updated: 13 Oct 2021 11:17 AM IST)
t-max-icont-min-icon

உதவுவது போல் நடித்து வயதான தம்பதியிடம் நகை, பணம் மோசடி செய்த ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி, அக்.
உதவுவது போல் நடித்து வயதான தம்பதியிடம் நகை, பணம் மோசடி செய்த ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வயதான தம்பதி
புதுவை வினோபா நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் புத்துப்பட்டான். இவரது மனைவி ராகிணி (வயது 80). இவர் ஆசிரியையாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். 
இருவரும் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் ஆவார்கள். மகன், மகள்  பிரான்சில் இருந்து வரும் நிலையில் இவர்கள் மட்டும் இங்கு தனியாக வசித்து வருகின்றனர். 
இந்தநிலையில் தங்களது தேவைக்காக அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரமேஷ் மற்றும் செல்வம், வேலு ஆகியோரை வயதான தம்பதியினர் அழைப்பது வழக்கம். அவர்களுடன் புத்துப்பட்டான் அவ்வப்போது வங்கிக்கு சென்று பணம் எடுத்து வந்துள்ளார். 
உதவுவதுபோல் மோசடி
இந்தநிலையில் புத்துப்பட்டான், ராகிணி ஆகியோர் தங்கள் வங்கி கணக்கை சரிபார்த்தபோது, பணம் குறைவாக இருந்தது. இதற்கிடையே புத்துப்பட்டான் அணிந்திருந்த 10 பவுன் நகைகளும் திருடு போயின. மேலும் பிரான்சில் உள்ள அவர்களது மகள் வீடு விற்கப்பட்டதில் ரூ.5 லட்சம் வரை அவர்களுக்கு உதவியாக இருந்த ரமேஷ் உள்ளிட்ட 3 பேரும் கணக்கில் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கோரிமேடு போலீசில் புத்துப்பட்டான் புகார் செய்தார். போலீசார் விசாரித்ததில் ஆட்டோ டிரைவர் ரமேஷ், புத்துப்பட்டானை வங்கிக்கு அழைத்து செல்லும்போது அவருக்கு தெரியாமல் சிறுக சிறுக பணத்தை எடுத்து ஏமாற்றியது தெரியவந்தது. ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரை மோசடி செய்து இருப்பதாக தெரிகிறது.
இது தொடர்பாக கோரிமேடு போலீசார், ஆட்டோ டிரைவர் ரமேஷ், செல்வம், வேலு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story