காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு பரிசல் இயக்க தடை
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
பென்னாகரம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
கனமழை
கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாபாளையம், கேரட்டி, பிலிகுண்டு, ராசிமணல், ஒகேனக்கல், ஊட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 19 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. நேற்று மதியம் 2 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.
பரிசல் இயக்க தடை
இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் செந்நிறத்தில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையில் தண்ணீர் சென்றதாலும், காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதாலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ், உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story