கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து 70 யானைகள் ஜவளகிரி வனப்பகுதியில் தஞ்சம்


கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து  70 யானைகள் ஜவளகிரி வனப்பகுதியில் தஞ்சம்
x
தினத்தந்தி 13 Oct 2021 11:18 AM IST (Updated: 13 Oct 2021 11:18 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 70 யானைகள் ஜவளகிரி வனப்பகுதியில் 2 குழுக்களாக தஞ்சமடைந்து உள்ளன.

தேன்கனிக்கோட்டை:
கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 70 யானைகள் ஜவளகிரி வனப்பகுதியில் 2 குழுக்களாக தஞ்சமடைந்து உள்ளன.
யானைகள் தஞ்சம்
கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் உணவு தேடி 100-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தமிழக வனப்பகுதியான கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள ஜவளகிரி வனப்பகுதிகளுக்கு இடம் பெயருவது வழக்கமாக உள்ளது. 
அந்த வகையில் கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து 70-க்கும் மேற்பட்ட யானைகள் தேன்கனிக்கோட்டை அடுத்த ஜவளகிரி வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்து தஞ்சமடைந்து உள்ளன. இந்த யானைகள் தற்போது 2 குழுக்களாக பிரிந்து வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. ஜவளகிரி வனச்சரகம் சந்திரன் ஏரி அருகே 35 யானைகளும், பாளையம் வனப்பகுதியில் 35 யானைகளும் முகாமிட்டுள்ளன.
தீவிர கண்காணிப்பு
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து சென்றனர். அவர்கள் பட்டாசு வெடித்து யானைகளை விரட்டியதால் அந்த யானைகள் திரும்பவும் ஜவளகிரி வனப்பகுதியை நோக்கி சென்றன. இதனால் ஜவளகிரி வனச்சரகர் சுகுமார், தேன்கனிக்கோட்டை வனச்சரகர் முருகேசன் மற்றும் 25-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் யானைகளை தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்த யானைகள் ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதிகளை நோக்கி வராமல் தடுத்து மீண்டும் கர்நாடக மாநிலத்திற்கு விரட்டியடிக்கும் பணிகளை அவர்கள் மேற்கொண்டுள்ளனர். ஜவளகிரி வனப்பகுதியில் 70 யானைகள் முகாமிட்டு உள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Next Story