ஊட்டியில் விற்பனைக்கு குவிந்த கரும்புகள்


ஊட்டியில் விற்பனைக்கு குவிந்த கரும்புகள்
x
தினத்தந்தி 13 Oct 2021 1:31 PM GMT (Updated: 13 Oct 2021 1:31 PM GMT)

ஆயுத பூஜையையொட்டி ஊட்டியில் கரும்புகள் விற்பனைக்கு குவிந்து உள்ளது.

ஊட்டி

ஆயுத பூஜையையொட்டி ஊட்டியில் கரும்புகள் விற்பனைக்கு குவிந்து உள்ளது.

ஆயுத பூஜை

தமிழகத்தில் ஆயுத பூஜை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. நவராத்திரி தொடங்கி ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜை நடந்து வரும்போது ஆயுத பூஜை கொண்டாடுவது வழக்கம். இதையொட்டி பொதுமக்கள் தாங்கள் அன்றாடம் பயன்படுத்தும் வாகனங்களை கழுவி சுத்தம் செய்து பூஜை செய்கின்றனர். மேலும் தொழில் நிறுவனங்களில் சுத்தம் செய்து ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இந்த பூஜையில் வாழை இலை, வேப்ப இலை, மா இலை, பழங்கள் போன்றவை முக்கியமாக இடம்பெறுகிறது. ஆயுத பூஜையை முன்னிட்டு ஊட்டி நகராட்சி மார்க்கெட்டுக்கு கரும்புகள் விற்பனைக்கு குவிந்து உள்ளது.

கரும்புகள் விற்பனை

சேலம் மாவட்டம் சங்ககிரியில் இருந்து கரும்புகள் லாரிகளில் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. மார்க்கெட் ஓரத்தில் கரும்புகளை வைத்து வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். ஆயுத பூஜையை கொண்டாடும் வகையில் பொதுமக்கள் கரும்புகளை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். மேலும் பூஜைக்கு தேவையான பழங்கள், மா இலை, வேப்ப இலை, சந்தனம், பொரி போன்றவற்றை வாங்கினர். இதனால் ஊட்டி மார்க்கெட்டில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது.

விலை உயர்வு

ஆயுத பூஜையையொட்டி பூக்கள் விலை சற்று உயர்ந்து உள்ளது. ஒரு முழம் மல்லிகை-ரூ.70, செவ்வந்தி-ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மா இலை ரூ.20, வேப்ப இலை ரூ.10, தண்டுடன் கூடிய வாழை ரூ.20 முதல் ரூ.25-க்கு என விற்பனை செய்யப்பட்டது. ஒரு கரும்பு ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனையாகிறது. இது கடந்த ஆண்டை விட ரூ.10 அதிகம். 

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் லாரி வாடகை அதிகரிப்பால் கரும்பு விலை உயர்ந்து உள்ளது. ஒரு கட்டு (20 கரும்புகள்) ரூ.700 முதல் ரூ.800 வரை விற்பனையாகிறது.


Next Story