வாலிபர் குத்திக்கொலை


வாலிபர் குத்திக்கொலை
x
தினத்தந்தி 14 Oct 2021 12:45 AM IST (Updated: 14 Oct 2021 12:45 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் வாலிபர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய தாய் மாமா உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலில் வாலிபர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய தாய் மாமா உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கம்பங்கூழ் வியாபாரம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோமதியாபுரம் 1-வது தெருவைச் சேர்ந்தவர் அருணாசலம் மனைவி முத்துமாரி. சங்கரன்கோவிலில் கம்பங்கூழ் கடை நடத்தி வருகிறார். இந்த கடையை முத்துமாரியுடன் அவரது மகன்கள் வைரமுத்து (வயது 29), தங்கமுத்து (28) ஆகியோரும் சேர்ந்து கவனித்து வந்தனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அருணாசலம் இறந்து விட்டார். இதனால் முத்துமாரியின் சகோதரர் செங்கோட்டையை சேர்ந்த அன்பழகன் (41) அவரது வியாபாரத்திற்கு உதவி செய்து வந்ததாக கூறப்படுகிறது.

வாக்குவாதம்

இதற்கிடையே, அன்பழகன் கூழ் கடையில் தன்னையும் பார்ட்னராக சேர்க்கச் சொல்லி முத்துமாரி மற்றும் அவரது மகன்களிடம் வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு சங்கரன்கோவில் ராமசாமியாபுரம் 2-வது தெருவில் உள்ள கூழ் கடையில் பார்ட்னராக சேர்ப்பது தொடர்பாக அன்பழகனுக்கும், வைரமுத்துவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

குத்திக்கொலை

அப்போது சங்குபுரம் 3-வது தெருவைச் சேர்ந்த மாரிமுத்து மகன் நாராயணன் (33) என்பவர், வைரமுத்து தப்பி ஓடி விடாமல் பிடித்துக் கொள்ள அன்பழகன் அவரை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் வைரமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்ததும் சங்கரன்கோவில் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். வைரமுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

2 பேர் கைது

இதுதொடர்பாக வைரமுத்துவின் தம்பி தங்கமுத்து போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து அன்பழகன், நாராயணன் ஆகிய இருவரையும் கைது செய்தார்.

மேலும் மோதலில் அன்பழகன் காயம் அடைந்ததால், அரசு ஆஸ்பத்திரியில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story