திண்டுக்கல்லில் ஆயுதபூஜை பொருட்கள் விற்பனை களைகட்டியது
திண்டுக்கல்லில் ஆயுதபூஜை பொருட்கள் விற்பனை களைகட்டியது. பொதுமக்கள் குவிந்ததால் முக்கிய சாலைகளில் நெரிசல் ஏற்பட்டது.
திண்டுக்கல்:
ஆயுதபூஜை வழிபாடு
ஆயுதபூஜை பண்டிகை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவில்கள் மட்டுமின்றி வீடுகளிலும் மக்கள் பூஜை செய்து வழிபடுவார்கள். வீடுகளில் விவசாய கருவிகள், பிற வேலைக்காக பயன்படுத்தப்படும் உபகரணங்களை வைத்து பூஜை செய்வது வழக்கம்.
அதேபோல் கடைகளில் தராசு, எடைக்கற்கள் மற்றும் அளத்தல் கருவிகள் உள்ளிட்டவற்றை சாமி படத்தின் முன்பு வைத்து வழிபாடு நடத்து வார்கள். இதுதவிர தனியார் நிறுவனங்களில் அனைத்து வகை எந்திரங்கள், கருவிகளுக்கும் பூஜை செய்வார்கள். இதில் அனைத்து பணியாளர்களும் பங்கேற்பார்கள். இதுதவிர ஒர்க்ஷாப், ஆட்டோ நிறுத்தம் உள்ளிட்டவற்றில் ஆயுதபூஜை வழிபாடு உற்சாகமாக நடைபெறும்.
பூஜை பொருட்கள்
இந்த ஆயுதபூஜை வழிபாட்டில் முக்கிய இடம் பெறுவது அவல், பொரி, கடலை ஆகியவை ஆகும். இதையொட்டி திண்டுக்கல்லில் நாகல்நகர், மெயின்ரோடு, கடைவீதி, மேற்கு ரதவீதி, ஏ.எம்.சி. சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரத்தில் அவல், பொரி கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை நடந்தது.இதற்கு அடுத்து பூஜையில் பழங்களும் முக்கிய இடம் பெறுகின்றன. இதனால் பல இடங்களில் பழக்கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. அவற்றில் ஆப்பிள், மாதுளை, கொய்யா, விளாம்பழம், ஆரஞ்சு, சாத்துக்குடி உள்பட அனைத்து வகையான பழங்களும் நேற்று விற்பனை செய்யப்பட்டன. இதுதவிர ஆயுதபூஜையில் வாழை கன்றுகள், மாவிலை தோரணம் கட்டப்படும். எனவே விவசாயிகள் கிராமங்களில் இருந்து வாழை கன்றுகள், மாவிலைகளை கொண்டு வந்து விற்பனை செய்தனர்.
50 டன் பூக்கள்
எனவே பூஜை பொருட்களை வாங்குவதற்கு திண்டுக்கல் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திண்டுக்கல்லில் குவிந்தனர். அவல், பொரி, கடலை, பழங்கள், வாழை கன்றுகள் என தேவையான பொருட்களை ஆர்வமுடன் வாங்கினர். இதனால் அனைத்து வகையான பழங்களின் விலையும் கணிசமாக உயர்ந்தது.மேலும் பூஜையில் முதன்மையான இடம் பிடிக்கும் பூக்களை வாங்குவதற்கு மக்கள் அதிக அளவில் வந்தனர். இதனால் திண்டுக்கல் பூ மார்க்கெட் திக்குமுக்காடியது. அங்கிருந்து மதுரை, நெல்லை, சென்னை உள்பட பல ஊர்களுக்கு பூக்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் பூ மார்க்கெட் மட்டுமின்றி பல இடங்களில் சாலையோர கடைகள் அமைத்தும் பூக்கள் விற்கப்பட்டன. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 50 டன் பூக்கள் விற்பனை ஆகின. இதனால் பூக்கள் விலையும் ஓரளவு உயர்ந்து காணப்பட்டது.
களைகட்டியது
இதற்கிடையே மாலையில் ஆயுதபூஜை பொருட்களை வாங்குவதற்கு ஏராளமான மக்கள் நகரில் குவிந்தனர். இதனால் ஆயுதபூஜை பொருட்களின் விற்பனை களைகட்டியது. நாகல்நகர், மெயின்ரோடு, கடைவீதி, ரதவீதிகளில் கடும் நெரிசல் ஏற்பட்டது. பெரும்பாலான மக்கள் வாகனங்களில் வந்ததால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே பல இடங்களில் போக்குவரத்து போலீசார் இரவு வரை நின்று போக்குவரத்தை சரிசெய்தனர்.
பழனி
இதேபோல் பழனியில், மார்க்கெட் பகுதியில் ஆயுத பூஜைக்கு பொருட்கள் வாங்குவதற்கு நேற்று பொதுமக்கள் குவிந்தனர். சாலையோரங்களில் வாழை கன்று, பொரி, பழங்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. மார்க்கெட் பகுதியில் கூட்டம் அதிகமாக இருந்ததால் மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்கள் அனுமதிக்கவில்லை. திருட்டு உள்ளிட்ட சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story