தினத்தந்தி புகார்பெட்டி


தினத்தந்தி புகார்பெட்டி
x
தினத்தந்தி 13 Oct 2021 7:36 PM GMT (Updated: 13 Oct 2021 7:36 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

நோய் பரவும் அபாயம்

நாமக்கல் நகராட்சி சின்ன அய்யம்பாளையம் பாரதிதாசன் நகர் 8-வது வார்டில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. இதனால் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலையில் தேங்கி கிடக்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சுகாதார அதிகாரிகள் இதுதொடர்பாக துரித நடவடிக்கை எடுத்து கழிவுநீரை வெளியேற்ற வேண்டும். வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை வெளியேற்ற நகராட்சி நிர்வாகம் கால்வாய் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஊர்பொதுமக்கள், பாரதிதாசன் நகர், நாமக்கல்.

சேலம் அழகாபுரம் காட்டூர் பகுதியில் மழைநீருடன், சாக்கடை நீரும் கலந்து தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளன. அந்த பகுதியில் டெங்கு பாதிப்பு உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் இந்த பகுதியில் தேங்கி கிடக்கும் கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஊர்மக்கள், காட்டூர், சேலம்.

நிழற்கூடம் அமைக்கப்படுமா?

சேலம் மாவட்டம் வாழப்பாடி ஒன்றியம் பள்ளத்தாதனூர் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் இருந்தது. நல்லா இருந்த நிழற்கூடத்தை இடித்துவிட்டார்கள். மீண்டும் அந்த இடத்தில் நிழற்கூடம் கட்டிக்கொடுக்கவில்லை. 5 கிராமங்களில் இருந்து பஸ் பயணிகள் மழை மற்றும் வெயில் காலங்களில் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் அந்த இடத்தில் நிழற்கூடம் அமைத்துக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எம்.பழனிமுத்து, பள்ளத்தாதனூர், சேலம்.

ஆமை வேகத்தில் பாலம் பணி

நாமக்கல்- பரமத்தி சாலையில் பழைய நகராட்சி அருகில் சாலை மேம்பாட்டு பணி மற்றும் சிறிய பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. இதனால் பரமத்திவேலூர் சாலையில் வரும் அனைத்து வாகனங்களும் பூங்கா சாலைக்கு திருப்பி விடப்பட்டு உள்ளன. எனவே பூங்கா சாலை, பிரதான சாலையில் சந்திக்கும் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக பண்டிகை நாட்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓடிட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். எனவே ஆமைவேகத்தில் நடைபெறும் பாலம் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சங்கர், நாமக்கல்.

மின்விளக்கு பொருத்தப்படுமா?

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுகா பால ஜங்கமனஅள்ளி கிராமத்தில் லட்சுமி நரசிம்ம சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் வெளியே உள்ள மின்கம்பத்தில் நீண்ட நாட்களாக மின் விளக்கு எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள், பொதுமக்கள் போதிய வெளிச்சம் இன்றி சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இதேபோல இந்த பகுதியில் மின்கம்பத்தில் மின்சார வயர்கள் மிகவும் பழையதாக உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி இந்த பகுதியில் மின்விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சண்முகம், பாலஜங்கமனஅள்ளி.

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கிட்டம்பட்டி சென்னை மேம்பாலம் அருகே உள்ள பஸ் நிறுத்தம் பகுதியில் குப்பைகள் குவியலாக கிடக்கிறது, இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.  இதனால் அந்த பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். எனவே இந்த பகுதியில் குப்பையை அகற்ற சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெயகுமார், கிருஷ்ணகிரி.

சாலையில் தேங்கும் கழிவுநீர்

தர்மபுரி ஒட்டப்பட்டியில் சேலம் சாலையை ஒட்டி வள்ளுவர் நகர் அமைந்துள்ளது. இந்த பகுதியில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வீடுகளின் முன்பகுதியில் சிறிய அளவில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. இதில் ஓடும் கழிவுநீர் முறையாக வெளியேறுவதற்கு உரிய வசதி இல்லை. இதனால் இந்த பகுதியில் கழிவுநீர் சீராக வெளியேற முடியாமல் வழிந்து வீடுகளின் முன்பு உள்ள நடைபாதை மற்றும் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு, தேங்கி நிற்கும் கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி இந்த பகுதியில் காய்ச்சல் பரவி அச்சத்தை ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் சாலையில் தேங்கும் கழிவுநீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாராயணன், ஒட்டப்பட்டி.

உடைந்து கிடக்கும் இரும்பு தடுப்புகள்

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். 34-வது கொண்டை ஊசி வளைவில் உள்ள இரும்பு தடுப்புகள் கார் மோதி உடைந்தன. அந்த தடுப்புகள் மீண்டும் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே வாகன ஓட்டிகளின் பாதுபாப்பு கருதி தடுப்புகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊர் மக்கள், கொல்லிமலை.

Next Story