தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் உயர்வு
ஆயுத பூஜைைய முன்னிட்டு தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்தது. பிச்சி கிலோ ரூ.1,250-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஆரல்வாய்மொழி:
ஆயுத பூஜைைய முன்னிட்டு தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்தது. பிச்சி கிலோ ரூ.1,250-க்கு விற்பனை செய்யப்பட்டது.
பூ மார்க்கெட்
ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளையில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு உள்ளூர் மட்டுமல்ல வெளியூரில் இருந்தும் வெளி மாவட்டத்தில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இந்த பூக்கள் சிறு மற்றும் பெரு வியாபாரிகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. அண்டை மாநிலமான கேரளாவுக்கும் அதிகளவில் பூக்கள் அனுப்பப்படுகிறது.
பூக்களின் விலை நாளுக்கு நாள் மாறுபடும் தன்மையுடையது. பண்டிகை மற்றும் திருவிழா, கோவில் விழா நாட்களில் பூக்களின் விலை மிக அதிகமாக இருக்கும். சாதாரண நாட்களில் குறிப்பாக ஆனி, ஆடி மாதங்களில் பூக்கள் விலை மிகக் குறைவாக இருக்கும்.
கேரளாவில் பிரசித்திப் பெற்ற ஓணம் பண்டிகையையொட்டி பூக்களின் விலை உச்சத்தில் இருக்கும். அன்றைய தினம் சுமார் 500 டன்னுக்கு மேலாக பூக்கள் விற்பனையாகும். பல பெரிய வியாபாரிகள் மார்க்கெட்டுக்கு வந்து பூக்களை கொள்முதல் செய்து செல்வார்கள்.
ஆயுத பூஜை
அதேபோல் அனைவராலும் சிறப்பாக கொண்டாடப்படும் ஆயுதபூஜை தினத்தன்றும் பூக்கள் விலை உச்சத்தில் இருக்கும். இன்று (வியாழக்கிழமை) ஆயுத பூஜை கொண்டாடப்படுவதால் அதை முன்னிட்டு நேற்று பூக்களின் விலை கிடு கிடு என உயர்ந்தது.
நேற்று முன்தினம் கிலோ ரூ.500-க்கு விற்பனையான பிச்சிப்பூ நேற்று ரூ. 1,250-க்கு விற்பனையானது. நேற்று முன்தினம் ரூ. 400-க்கு விற்பனையான மல்லிகைப்பூ நேற்று ஒரு கிலோ ரூ.800-க்கு விற்பனையானது. இதுபோல், தாமரைப்பூ ஒன்று ரூ. 20-க்கு விற்கப்பட்டது.
தோவாளை மார்க்கெட்டில் விற்பனையான மற்ற பூக்களின் விலை கிலோவில் வருமாறு:-
அரளி ரூ.400, முல்லை ரூ.1,200, சம்பங்கி ரூ.400, வாடாமல்லி ரூ.200, கோழிப்பூ ரூ.100, துளசி ரூ50, பச்சை ஒரு கட்டு ரூ. 10, ரோஸ் பாக்கெட் ரூ.50, பட்டன் ரோஸ் ரூ.250, ஸ்டெம் ரோஸ் ரூ. 170, மஞ்சள் கேந்தி ரூ.100, சிவப்பு கேந்தி ரூ. 120, சிவந்தி மஞ்சள் ரூ.200, சிவந்தி வெள்ளை ரூ.400, கொழுந்து ரூ.100, மரிக்கொழுந்து ரூ.150 என விற்பனையானது.
தோவாளை மார்க்கெட்டில் பூ விற்பனை குறித்து பூ வியாபாரி கிருஷ்ணகுமார் கூறியதாவது:-
150 டன் வந்தது
இந்த ஆண்டு ஆயுதபூஜை தினத்திற்காக வெளி மாவட்டங்களான சேலம், மதுரை, திண்டுக்கல் போன்ற பகுதிகளில் இருந்து சுமார் 150 டன் பூக்கள் வந்து இறங்கின. நேற்று அதிகாலை முதல் ஏராளமான பொதுமக்கள் வந்து பூக்களை வாங்கி சென்றனர். இதனால், பூக்கள் அனைத்தும் விற்று தீர்ந்தன. இதனால் வியாபாரிகளான நாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story