பப்பாளிப்பழம் கிலோ ரூ.4க்கு விற்பனை


பப்பாளிப்பழம் கிலோ ரூ.4க்கு விற்பனை
x
தினத்தந்தி 15 Oct 2021 7:01 PM IST (Updated: 15 Oct 2021 7:01 PM IST)
t-max-icont-min-icon

பப்பாளிப் பழம் கிலோ ரூ.4க்கு விற்பனை

குடிமங்கலம் பகுதியில் பப்பாளிப் பழம் கிலோ ரூ.4க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
பப்பாளி சாகுபடி
குடிமங்கலம் பகுதியில் தென்னை விவசாயம் அதிகளவு நடைபெற்று வருகிறது. விவசாயிகள் ஒரே மாதிரியான பயிர்களை சாகுபடி செய்து கட்டுப்படியான விலை கிடைக்காமல் அவதிப்படுவதை தடுக்கும் வகையில் சந்தை வாய்ப்புள்ள புதிய பயிர்களைப் பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். குடிமங்கலம் பகுதியில் பப்பாளி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
குடிமங்கலம் பகுதியில் ரெட்லேடி ரகம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இது நல்ல சிவப்பு நிறமும் சுவையும் கொண்டது என்பதால் விவசாயிகள் விரும்பி பயிரிட்டு வருகின்றனர். குடிமங்கலம் பகுதியில் அறுவடை செய்யப்படும் பப்பாளி பழங்கள் கேரளாவிற்கு அதிகளவு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது.வியாபாரிகள் நேரடியாக தோட்டங்களுக்கு சென்று பப்பாளிகளை அறுவடை செய்துவந்தனர். தற்போது விலை சரிவு காரணமாக பப்பாளிபழங்கள் மரங்களிலே அழுகும் நிலை உள்ளது. 
இதுகுறித்து பப்பாளி சாகுபடி செய்துள்ள விவசாயி கூறியதாவது:-
விலை சரிவு
பப்பாளி ரகத்தின் வயது 22 மாதங்கள் ஆகும். குடிமங்கலம் பகுதியில் சொட்டு நீர் பாசனம் மூலம் பப்பாளி சாகுபடியில் ஈடுபட்டு வருகிறோம். பப்பாளி கன்றுகளை 7 அடிக்கு 7 அடி இடைவெளியில் குழியெடுத்து நடவு செய்ய வேண்டும். பப்பாளி சாகுபடியில் கூலி ஆட்கள் தேவை குறைவாக உள்ளது. பப்பாளி சாகுபடி செய்த 8 மாதங்களில் இருந்து அறுவடைக்கு தயாராகும். பப்பாளியை ஆண்டு முழுவதும் பயிரிடலாம்.
 பப்பாளிக்கு வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. பப்பாளி 8 மாதங்களுக்குப் பிறகு தொடர்ந்து 14  மாதங்கள் வரை அறுவடை செய்யலாம். பப்பாளிபழங்கள் கடந்த சில மாதங்களாக விலை சரிந்து காணப்படுகிறது. இதனால் பப்பாளி காய்களில் இருந்து பால் எடுத்து ஒரு கிலோ ரூ.100 க்கு விற்பனை செய்தோம்.  .பப்பாளிபழங்கள் தற்போது விலை சரிந்து அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ. 4க்கு மட்டுமே விற்பனையாகிறது. வியாபாரிகளை பலமுறை அழைத்தும் பப்பாளிபழங்களை அறுவடை செய்ய வருவதில்லை. இதனால் பப்பாளி சாகுபடி செய்த விவசாயிகள் உரியவிலை கிடைக்காமல் கவலை அடைந்துள்ளனர். பப்பாளி பழங்கள் மரங்களிலே அழுகும் நிலை உள்ளது.
 இவ்வாறு அவர் கூறினார்.

Next Story