திண்டுக்கல் அருகே பர்னிச்சர் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை போலீசார் விசாரணை
திண்டுக்கல் அருகே பர்னிச்சர் கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டது.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே உள்ள வேடபட்டியை சேர்ந்தவர் ராஜாமுகமது (வயது 40). இவர் திண்டுக்கல் அருகே ஏ.பி.நகரில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் நேற்று கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜாமுகமது கடையின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது கடையில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் கடையின் வெளியே இருந்த கண்காணிப்பு கேமரா உடைக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து அவர் கடையின் உள்ளே உள்ள பொருட்களை சரிபார்த்தார். அப்போது அங்கு வைத்திருந்த டி.வி., மின்விசிறி, குக்கர் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.40 ஆயிரம் ஆகும். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன், சப்-இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள், தடயங்களை பதிவு செய்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்த மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story