வார இறுதி நாட்களிலும் தரிசனத்துக்கு அனுமதி கோவில்களில் திரண்ட பக்தர்கள் கூட்டம்
வார இறுதி நாட்களிலும் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டதால் கோவில்களில் நேற்று பக்தர்கள் குவிந்தனர்.
முருகபவனம்:
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. அதன்படி வார இறுதியில் வெள்ளி, சனி, ஞாயிறுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல முடியாமல் பக்தர்கள் தவித்து வந்தனர்.
இந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வழிபாட்டு தலங்களில் வார இறுதி நாட்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நேற்று முதல் அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள கோவில்கள் நேற்று திறக்கப்பட்டன. பக்தர்கள் அதிகாலையில் இருந்தே ஆர்வமுடன் வந்து சாமி தரிசனம் செய்தனர். அதன்படி திண்டுக்கல்லில் உள்ள கோவில்களிலும் நேற்று பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு வழிபாடு
நேற்று விஜயதசமி என்பதால் திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், பழம் உள்ளிட்ட 11 வகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் மாலையில் பத்மகிரீஸ்வரருக்கு அம்புபோடும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி உள்பிரகாரத்தை வலம் வந்தார். கோவிலின் ஈசான மூலையில் அம்பு போடும் நிகழ்ச்சி நடந்தது. அதன் பின்னர் அம்மனுக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணி அளவில் அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். இதேபோல் கோட்டை மாரியம்மன் கோவிலிலும் நேற்று அம்மனுக்கு சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பக்தர்கள் மகிழ்ச்சி
வார இறுதி நாட்களில் கோவில்கள் அடைக்கப்படும் என்பதால் விஜயதசமி தினத்தன்று கோவில்களுக்கு செல்ல முடியாதோ? என்ற கலக்கத்தில் பக்தர்கள் இருந்தனர். இந்த நிலையில் நேற்று முதல் வார இறுதி நாட்களிலும் வழிபாட்டு தலங்கள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்ததை அடுத்து பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story