காதலனே பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை இறுக்கி கொன்றது அம்பலம்


காதலனே பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை இறுக்கி கொன்றது அம்பலம்
x
தினத்தந்தி 15 Oct 2021 9:46 PM IST (Updated: 15 Oct 2021 9:46 PM IST)
t-max-icont-min-icon

குத்தாலம் அருகே சிறுமி மர்ம சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. காதலனே பாலியல் பலாத்காரம் செய்து வேட்டியால் கழுத்தை இறுக்கி கொன்றது போலீசாரின் விசாரணையில் அம்பலமானது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

குத்தாலம்:
குத்தாலம் அருகே சிறுமி மர்ம சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. காதலனே பாலியல் பலாத்காரம் செய்து வேட்டியால் கழுத்தை இறுக்கி கொன்றது போலீசாரின் விசாரணையில் அம்பலமானது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சிறுமி மர்மச்சாவு

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 13 வயதான சிறுமி, அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள். அந்த சிறுமி கடந்த 7-ந் தேதி இரவு 9 மணி அளவில் அதே பகுதியில் உள்ள மாமா வீட்டிற்கு சென்று வருவதாக தனது தாயாரிடம் தெரிவித்து சென்றவள், மீண்டும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் அவளை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடினர்.  
அப்போது சிறுமியின் மாமா வீட்டின் பின்புறம் உள்ள வாய்க்காலில் மர்மமான முறையில் சிறுமி பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவள் அணிந்திருந்த பேண்ட்(லெகின்ஸ்) கிழிந்து இருந்ததுடன், ரத்தக்கறையும் படிந்து காணப்பட்டது.

உறவினர்கள் சாலை மறியல்
இதுகுறித்து தகவல் அறிந்த குத்தாலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். இதையடுத்து, சிறுமியின் உடலை போலீசார் கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்து சிறுமியின் உடலை குடும்பத்தினரிடம் டாக்டர்கள் ஒப்படைத்தனர். 
சிறுமியின் உடலை ஆம்புலன்சில் வீட்டுக்கு கொண்டு சென்றபோது  உறவினர் மற்றும் கிராம மக்கள் ஆம்புலன்சை மறித்து சிறுமியின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தனிப்படை அமைப்பு
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. 
தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக அநத பகுதியை சேர்ந்த சிலரை தனிப்படை போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். 

வாலிபரை பிடித்து விசாரணை
இதனிடையே சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து இந்த வழக்கை போலீசார், கொலை வழக்காக மாற்றம் செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
சந்தேகத்தின்பேரில் அந்த பகுதியை சேர்ந்த பிரபாகர்(வயது 25) என்பவரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
பாலியல் பலாத்காரம்
விசாரணையில் போர்வெல் கம்ப்ரசர் ஆபரேட்டராக வேலை பார்க்கும் அவர், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து தனது வேட்டியால் கழுத்தை இறுக்கி கொன்றதை ஒப்புக்கொண்டார். 
கைதான பிரபாகரும், கொலை செய்யப்பட்ட சிறுமியும் கடந்த 3 மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். சம்பவத்தன்று சிறுமியை அவரது மாமா வீட்டின் பின்புறம் வருமாறு பிரபாகர் அழைத்துள்ளார். அங்கு வந்த சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

கழுத்தை இறுக்கி கொலை
அந்த நேரத்தில் பிரபாகர் அந்த சிறுமியிடம், மற்ற வாலிபர்களிடம் சகஜமாக பேசக்கூடாது என்று கண்டித்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த பிரபாகர் தனது  வேட்டியால் சிறுமியின் கழுத்தை இறுக்கியுள்ளார். 
இதில் மயக்கம் அடைந்த அவரை அருகில் இருந்த வாய்க்காலில் வீசியுள்ளார். வாய்க்காலில் இருந்த சேற்றில் சிக்கி மூச்சுத்திணறி சிறுமி உயிரிழந்துள்ளார். பின்னர் அங்கிருந்து பிரபாகர் தப்பி ஓடிவிட்டார். போலீசார் தன்னை நெருங்குவதை அறிந்த அவர், வெளியூருக்கு தப்பி செல்ல பஸ்சில் ஏற முயன்றபோது போலீசாரிடம் சிக்கிக்கொண்டார். 

கைது-சிறையில் அடைப்பு
பின்னர் போலீசார் பிரபாகரை கைது செய்து அவரை நாகை மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். 
அதன்பேரில் பொறையாறு கிளை சிறையில் பிரபாகரை போலீசார் அடைத்தனர்.

Next Story