விருத்தாசலம் பகுதியில் இடி-மின்னலுடன் மழை: உப்புஓடை தரைப்பாலம் துண்டிப்பு 25 கிராம மக்கள் அவதி


விருத்தாசலம் பகுதியில் இடி-மின்னலுடன் மழை: உப்புஓடை தரைப்பாலம் துண்டிப்பு 25 கிராம மக்கள் அவதி
x
தினத்தந்தி 15 Oct 2021 10:48 PM IST (Updated: 15 Oct 2021 10:48 PM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் பகுதியில் இடி-மின்னலுடன் பெய்த பலத்த மழையால் பெரம்பலூர்-எடையூர் உப்பு ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு 25 கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

விருத்தாசலம், 

மழை

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சில இடங்களில் இடியுடன் கூடிய மிக கன மழையும், சில மாவட்டங்களில் கன மழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. நேற்று அதிகாலை வரை இடி-மின்னலுடன் விட்டு, விட்டு பலத்த மழை பெய்தது.
கடலூரில் நேற்று முன்தினம் மாலை 6.30 மணி அளவில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. குடியிருப்பு பகுதிகளை சுற்றிலும் மழைநீர் தேங்கி நின்றது.

தரைப்பாலம் துண்டிப்பு

வேப்பூர் பகுதியில் பெய்த மழையால் விருத்தாசலம் அருகே பெரம்பலூர் - எடையூர் இடையே செல்லும் உப்பு ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை வெள்ளம் அதிகரித்தால் தரைப்பாலம் துண்டிக்கப்பட்டது. இதனால் விருத்தாசலத்தில் இருந்து பெரம்பலூர் வழியாக பெண்ணாடம் செல்லும் கிராம மக்கள் தங்கள் கிராமங்களுக்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டனர்.
அதாவது, எடையூர், சிறுமங்கலம், கோவிலூர், மதுரவல்லி உள்ளிட்ட 25 -க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் பிரதான சாலையில் உள்ள இந்த தரைப்பாலம் துண்டிக்கப்பட்டதால், 8 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இது போன்ற நிலையை தவிர்க்க தமிழக அரசு, இந்த உப்பு ஓடையில் மேம்பாலம் கட்டி தரவேண்டும் என இப்பகுதி கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

பொதுமக்கள் அவதி

இதேபோல் விருத்தாசலம் அருகே மன்னம்பாடி - எடையூர் கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள உப்பு ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. உப்பு ஓடை செல்லும் மேற்கண்ட 2 வழிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் விருத்தாசலம் மற்றும் பெண்ணாடம் பகுதிகளுக்கு செல்வதற்கு தரைப்பாலத்தில் ஆபத்தை அறியாமல் வெள்ளத்தை கடந்து சென்று வருகின்றனர். ஓடை அருகில் உள்ள விளை நிலங்களிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
விருத்தாசலம் பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக ஆங்காங்கே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவ தால் விவசாய விளை நிலங்களை மூழ்கடித்தபடி வெள்ளம் செல்கிறது. இதனால் சம்பா சாகுபடி பணிகளை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

துர்நாற்றம்

விருத்தாச்சலத்தில் சித்தலூர், மணலூர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் கடும் அவதிய டைந்து வருகின்றனர்.
குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீரில் கழிவு நீரும் கலந்து துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதியில் டெங்கு, மலேரியா, டைபாய்டு உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து அப்பகுதியில் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மழை அளவு

ஸ்ரீமுஷ்ணம், வேப்பூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, கொத்தவாச்சேரி, வடக்குத்து, சேத்தியாத்தோப்பு என மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. இருப்பினும் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மே.மாத்தூரில் 68 மில்லி மீட்டர் மழை பெய்தது. குறைந்தபட்சமாக சிதம்பரத்தில் 1 மில்லி மீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தில் சராசரியாக 15.19 மில்லி மீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
வேப்பூர்......................................53
ஸ்ரீமுஷ்ணம்...........................45.1
காட்டுமயிலூர்.......................45
குறிஞ்சிப்பாடி........................20
விருத்தாசலம்...........................20
பண்ருட்டி..................................14
கொத்தவாச்சேரி.....................13
கீழசெருவாய்.............................13
வடக்குத்து...................................13
குப்பநத்தம்.............................12.8
கலெக்டர் அலுவலகம்......12.6
சேத்தியாத்தோப்பு..............12.6
பெலாந்துறை.........................12.2
கடலூர்........................................12
வானமாதேவி............................4
காட்டுமன்னார்கோவில்......3
பரங்கிப்பேட்டை....................2
லால்பேட்டை...........................2

Next Story