விஜயதசமியையொட்டி திருவந்திபுரம் ஹயக்ரீவர் கோவிலில் ஏடு படிக்கும் நிகழ்ச்சி குழந்தைகள் அ, ஆ என நெல்லில் எழுதி படிப்பை தொடங்கினர்
விஜயதசமியையொட்டி திருவந்திபுரம் ஹயக்ரீவர் கோவிலில் ஏடு படிக்கும் நிகழ்ச்சி நடந்தது. குழந்தைகள் நெல்லில் அ, ஆ என எழுதி தங்களது படிப்பை தொடங்கினர்.
நெல்லிக்குப்பம்,
விஜயதசமி
விஜயதசமி நாளில் தொடங்கப்படும் அனைத்து காரியங்களும் சிறப்பாக அமையும் என்பது ஐதீகம். இந்த நன்னாளில் பள்ளிக்கூடங்களில் சேர்க்கப்படும் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள் என்பது மக்களின் நம்பிக்கையாகும். மேலும் விஜயதசமி அன்று திருவோண நட்சத்திரம் வருவது மற்றொரு சிறப்பாகும்.
அந்த வகையில் கல்விக்கு அதிபதியான சரஸ்வதி, லட்சுமி, ஹயக்ரீவர் ஆகிய சாமி சன்னதிகளுக்கு பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அழைத்து சென்று பூஜை செய்து பள்ளிக்கூடங்களில் சேர்ப்பார்கள்.
அந்த வகையில் கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் எதிரே அவுசதகிரி மலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஹயக்ரீவர் கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு ஏடு படிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
ஏடு படிக்கும் நிகழ்ச்சி
கல்விக்கு அதிபதியான ஹயக்ரீவருக்கு இக்கோவிலில் நேற்று காலை சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதைத்தொடர்ந்து தம்பதிகள் தங்களது குழந்தைகளுடன் படிக்க தேவையான கரும் பலகை, பேனா, பென்சில் உள்ளிட்ட எழுது பொருட்களை கொண்டு வந்து ஹயக்ரீவர் சன்னதியில் வைத்து வழிபட்டனர். அதன்பிறகு கோவில் வளாகத்தில் ஏடு படிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் ஹயக்ரீவர் சன்னதி முன்பு அமர்ந்து தரையில் அரிசி மற்றும் நெல்லை கொட்டி குழந்தைகளை தமிழில் அ, ஆ என எழுத வைத்து தங்களது பள்ளிப் படிப்பை ஆர்வத்துடன் தொடங்கி வைத்தனர்.
சிறப்பு பூஜை
முன்னதாக ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியையொட்டி திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் மற்றும் ஹயக்ரீவர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் கடலூர், புதுச்சேரி உள்பட பல்வேறு நகரை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்து சென்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story