மதுவில் கலந்து குடிப்பதற்காக மளிகை கடையில் குளிர்பானங்கள் திருடிய 4 பேர் கைது சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ
மதுவில் கலந்து குடிப்பதற்காக மளிகை கடையில் குளிர்பானங்கள் திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கடையில் திருடிய வீடியே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குறிஞ்சிப்பாடி,
மளிகை கடை
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள கருமாச்சிபாளையத்தை சேர்ந்தவர் தயாளன் (வயது 53). இவர் குள்ளஞ்சாவடி கடைவீதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று கடையில் இருந்த தயாளன், திடீரென கடையை பூட்டாமல் அருகில் இருந்த வீட்டுக்கு சென்றார்.
பின்னர் திரும்பி வந்து பார்த்த போது கடையில் இருந்து குளிர்பான பாட்டில்கள் மற்றும் பிஸ்கெட் பாக்கெட்டுகளின் எண்ணிக்கை குறைந்திருந்தது. இதனால் திடுக்கிட்ட அவர் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டார்.
குளிர்பானங்கள் திருட்டு
அப்போது பக்கத்து கிராமமான சின்னதானங்குப்பத்தை சேர்ந்த ராமதாஸ் மகன் மணி, பெரிய காட்டுசாகையை சேர்ந்த வேலு மகன் வீரமணி, குமார் மகன் தினேஷ், சேடப்பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் விஜயகுமார்(26) ஆகியோர் தயாளன் கடையில் இருந்து வெளியே சென்ற நேரத்தில் கடைக்குள் புகுந்து குளிர்பானங்கள் மற்றும் பிஸ்கெட் பாக்கெட்டுகளை திருடிச்சென்றது பதிவாகி இருந்தது.
இதை கண்டு திடுக்கிட்ட தயாளன், உடனே குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார், மணி உள்ளிட்ட 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
4 பேர் கைது
விசாரணையில் மணி, வீரமணி உள்ளிட்ட 4 பேரும் மதுவில் கலந்து குடிப்பதற்காகவும், மது அருந்தும் போது சாப்பிடுவதற்காகவும் குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்களை, தயாளனின் மளிகை கடைக்குள் புகுந்து திருடிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணி, வீரமணி, தினேஷ், விஜயகுமார் ஆகியோரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story